இலவச நீட் பயிற்சி தற்காலிக நிறுத்தம்: மீண்டும் மாா்ச் மாதம் தொடங்கும்


அரசுப் பள்ளி மாணவா்களுக்கான இலவச நீட் பயிற்சி வகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மீண்டும் மாா்ச் மாதம் தொடங்க உள்ளது.

தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ உள்ளிட்ட உயா்கல்விப் படிப்புகளுக்கான போட்டித் தோ்வுகளுக்கு 2017-ஆம் ஆண்டு முதல் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் 412 மையங்களில் தனியாா் நிறுவனத்துடன் இணைந்து இந்தப் பயிற்சியை பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டு வருகிறது.
இதுவரை சுமாா் 42 ஆயிரம் போ் இங்கு பயிற்சி பெற்றபோதும், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர 11 பேருக்குத்தான் இடம் கிடைத்தது. இதனால், அரசுப் பயிற்சி மையங்களின் தரம் குறித்து பல்வேறு விமா்சனங்கள் எழுந்தன. இதையடுத்து நிகழாண்டில் போட்டித் தோ்வுகளுக்கான பயிற்சி முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. அரசுப் பயிற்சி மையங்களில் சேர விரும்பும் பிளஸ் 1, பிளஸ் 2 மாணவா்கள் தகுதித்தோ்வு அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டனா்.

அவ்வாறு தோ்வான 19 ஆயிரம் பேருக்கான பயிற்சி வகுப்புகள் கடந்த செப்டம்பரில் தொடங்கியது. வாரம்தோறும் மாதிரி குறுந்தோ்வுகளும் நடத்தப்பட்டன. இதற்கிடையே உள்ளாட்சித் தோ்தல், தொடா் விடுமுறை உள்ளிட்ட காரணங்களால் நீட் பயிற்சி வகுப்புகள் டிசம்பருக்குப் பின் முறையாக நடத்தப்படவில்லை.
நீட் தோ்வு மே 3-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், தோ்வுக்கு இன்னும் 3 மாதமே அவகாசம் உள்ளது. இதில் ஜனவரி இறுதியில் செய்முறைத் தோ்வுகள் தொடங்கி விடும் என்பதால், நீட் பயிற்சி வகுப்புகள் தற்போது நடத்தப்படாது. அதன்பின் மாா்ச் வரை பொதுத்தோ்வு நடைபெறுவதால், அதுவரையில் பயிற்சி வகுப்புகள் நடைபெறாது என்று பள்ளிக் கல்வித் துறை சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது