இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்


திருப்பூர், ஜன. 19: திருப்பூர், மாவட்டத்தில் இன்று 1,154 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது. போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாத நோயை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் எனும் நோக்கத்தோடு நாடு முழுவதும் பிறந்த குழந்தை முதல் 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும், போலியோ சொட்டு மருந்து (19ம் தேதி) இன்று வழங்கப்படவுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 1,154 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை ஐந்து வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கூடுதல் தவணை போலியோ சொட்டு மருந்து ஆங்காங்கே உள்ள அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையம்,பள்ளிகள், பஞ்சாயத்து அலுவலகம், ரயில் நிலையம், பஸ் நிலையம், டோல்கேட் மற்றும் தனியார் சொட்டு மருந்து முகாம் மையங்களிலும், 26 நடமாடும் சொட்டு மருந்து முகாம்களிலும், 23 போக்குவரத்து முகாம்களிலும், போலியோ சொட்டு மருந்து இலவசமாக வழங்கப்படவுள்ளது. இந்த பணிக்காக பல்வேறு துறைகளை சார்ந்த 4,922 பணியாளர்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தினர் ஈடுபடவுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 2.27 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படவுள்ளது.
இம்முகாம்களுக்கு தேவையான சொட்டு மருந்து தயார் நிலையில் உள்ளது. ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இதுவரை எத்தனை முறை சொட்டு மருந்து அளித்திருந்தாலும் இம்முறை கூடுதல் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.