Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, January 8, 2020

நாடு முழுவதும் தமிழ்ப் பயிற்சி மையங்கள் தேவை: அமைச்சர் பாண்டியராஜன்


ஒரே தேசம், ஒரே பாடத்திட்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை என தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' குழுமத்தின் சார்பில் நடைபெறும் கல்விச் சிந்தனை அரங்கில், இளம் இந்தியா ஏன் வரலாறு மற்றும் கலாசாரம் குறித்து பயில வேண்டும் என்ற தலைப்பில் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் மஃபா பாண்டியராஜன் பேசினார். அவர் பேசியதாவது:

"தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் முதல் கல்விச் சிந்தனை அரங்கில் நான் எம்எல்ஏ-வாக வந்தேன். இரண்டாவது முறை கல்வித் துறை அமைச்சராக வந்தேன். தற்போது தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சராக வந்திருக்கிறேன்.




கடந்த சில நாட்களுக்கு முன் கீழடி அகழ்வாராய்ச்சி குறித்து தமிழகம் பரவலாக செய்திகளில் வந்தது. இதற்கு வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் நிறைய ஆர்வம் காட்டினர். கீழடி தொல்பொருள் கண்காட்சிக்கு இளைஞர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வருகை தருகின்றனர்.

வரலாறும், கலாசாரமும் இளைஞர்களின் வாழ்கைக்கு வடிவம் கொடுக்கும். பள்ளிகளில் வரலாறு, கலாசாரம் குறித்த கல்வியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரசாரங்கள், கண்காட்சிகள் உள்ளிட்டவை நடத்தப்பட்டு வருகிறது.

பொறியியல், மருத்துவம் போன்ற படிப்புகளிலும் மரபு, கலாசாரம் சார்ந்த கல்வியை இணைக்க வேண்டும். இதை 3-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இதை தற்போது உயர்கல்வியிலும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

வரலாறு, மரபு, கலாசாரம் சார்ந்த கல்வி நிறைய வாய்ப்புகளை அளிக்கிறது. முன்பெல்லாம் என்னவாக ஆக வேண்டும் என்றால் கலெக்டர், இன்ஜீனியர், டாக்டர் ஆக வேண்டும் என்பார்கள். ஆனால் தற்போது தொல்பொருள் ஆய்வாளர் ஆக வேண்டும், கல்வெட்டு ஆய்வாளர் ஆக வேண்டும் என்கின்றனர். இந்தத் துறைகளுக்கும் தற்போது நிறைய வாய்ப்புகள் இருக்கிறது. மருத்துவம் படிக்கும் மாணவர்கள்கூட தற்போது தொல்பொருள் ஆய்வு குறித்த கல்விக்கு வருகின்றனர்.




37 அருங்காட்சியகங்களை வரலாற்று ஆய்வகங்களாக மாற்றவுள்ளோம். மாணவர்கள் அங்கு அரைநாள் கழிக்க வேண்டும். அவர்களுக்கு வினாடி வினா நடத்தப்படும். அதற்கென்று தனி மதிப்பெண் வழங்கப்படும். மாணவர்கள் வகுப்பில் படிப்பதை தொடர்புபடுத்தும் வகையில் இந்த அருங்காட்சியகங்கள் அமைக்கப்படும். இதற்கென்று சமூகம், கலை, பொருளாதார வரலாறுகள் என 6 குழுக்கள் அமைக்கப்பட்டது.

ஒன்றரை கோடி தமிழ் மக்கள் இந்தியாவுக்கு வெளியே உள்ளனர். தமிழகம் அல்லாது, பிறமாநிலங்களில் தமிழ்ப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படவுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் இந்த தமிழ்ப் பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். இதற்கு மத்திய அரசு தரப்பில் ரூ. 100 கோடி ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது இணையதளம் மூலமும் கற்பிக்கப்படவுள்ளது.

ஹிந்தி பிரசார சபா போல் நாடு முழுவதும் தமிழுக்கும் தமிழ்ப் பயிற்சி மையங்கள் தொடங்க வேண்டும். தமிழ் மட்டுமல்லாது, 22 மொழிகளுள் 8, 9 மொழிகளைத் தேர்வு செய்ய வேண்டும். அவையும் வளர்க்கப்பட்டு கொண்டாடப்பட வேண்டும்" என்றார்.




இதனிடையே, தமிழகத்தில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைப் பின்பற்றினால் நிறைய வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர்,

"சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைக் காட்டிலும் சிறப்பான பாடத்திட்டமே தமிழகத்தில் உள்ளது. நெருக்கடி நிலை காலத்தில் கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப் பட்டியலுக்கு மாற்றப்பட்டதுதான் மிகப் பெரிய தவறு. ஒரே தேசம், ஒரே பாடத்திட்டம் என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டத்தை மாற்றும் வகையிலான கட்டமைப்பையே நான் பரிந்துரைப்பேன்" என்றார்.