Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, January 5, 2020

பிடித்துப் படி, பிடித்தவற்றைப் படி, புரிந்து படி: மாணவிகளுக்கு ஆட்சியர் உமாமகேஸ்வரி அறிவுரை


புதுக்கோட்டை: பிடித்துப் படி, பிடித்தவற்றைப் படி, புரிந்துப் படி என மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமாமகேஸ்வரி.

புதுக்கோட்டையில் சனிக்கிழமை தினமணி நாளிதழ் மற்றும் பாரதி மகளிர் கல்லூரிகள் இணைந்து நடத்திய பிளஸ் 2 மாணவிகளுக்கான சிகரத்தை வெல்வோம் வழிகாட்டி நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது

பிளஸ் 2 மாணவிகளுக்கான கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தும் தினமணி நாளிதழ், பத்திரிகைத் துறையில் நடுநிலைத் தன்மையோடு தொடர்ந்து செயல்படும் நாளிதழாகும்.

நான் கடந்த பணிக்காலத்தில் தினம் தோறும் அரசு மருத்துவமனைகளுக்குச் செல்ல வேண்டி இருக்கும். அப்படி நான் செல்லும் இடங்களில் எல்லாம் நோயாளிகள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனை வேண்டிக் கொள்வேன். என்னை இந்த நிலையில் வைத்துள்ள இறைவனுக்கு நன்றி சொல்வேன்.




மேலும் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் போது உங்களைப் போன்ற மாணவிகளைப் பார்க்கும் போது எனக்குள் ஓர் உத்வேகம் பிறக்கும். ஆனால் நிகழாண்டில் நான் பங்கு பெறும் முதல் நிகழ்ச்சி இது. உங்களைப் பார்க்கும்போது, எனக்கு அளவில்லாத உத்வேகம் கிடைத்துள்ளது.

எனக்குக் கிடைத்துள்ள இந்த உத்வேகம் இந்த ஆண்டு முழுவதும் என்னை மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படத் தூண்டும். அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு நான் கூறும் செய்தி என்னவெனில், நீங்கள் அனைவரும் தினம் தோறும் நாளிதழ்களைப் படிக்க வேண்டும் என்ற உறுதி மொழியை எடுக்க வேண்டும்.

என்னுடைய தந்தையும் ஓர் அரசு அலுவலர் தான். என்னுடைய தந்தை என்னிடம் சொல்லியவை- பிடித்துப் படி, பிடித்தவை எல்லாம் படி, புரிந்துப் படி என்பவைதான். அதன்படிதான் நான் படித்தேன். இன்று இந்நிலைக்கு வந்துள்ளேன். என் தந்தை எனக்குக் கூறியதை தான் நான் உங்களுக்கும் சொல்ல விரும்புகிறேன்.

ஒவ்வொருவருக்கும் மகிழ்வான பருவம் என்றால் அது பள்ளிப் பருவம் தான். இந்தப் பள்ளிப் பருவத்தில் உங்களுக்கும் பெற்றோருக்கும் சிரமம் இருக்க கூடாது என்பதற்காக அரசு பல்வேறு நடத்திட்டங்களான விலையில்லா பாடப்புத்தகம், மடிக்கணினி, இலவசப் பேருந்துப் பயண அட்டை, , சைக்கிள், கல்வி உதவித்தொகை போன்றவற்றை வழங்கி வருகிறது.

மகளிரின் கல்வி மேம்பட பத்தாம் வகுப்பு படித்தோருக்கு ரூ. 25 ஆயிரமும், பட்டப்படிப்பு படித்தோருக்கு ரூ. 50 ஆயிரமும் வழங்கி வருகிறது. இவை வழங்குவது மகளிரின் கல்வித் தரம் உயர வேண்டும் என்பதற்காகவே.




எனவே இவை அனைத்தையும் பயன்படுத்தி பெருமை வாய்ந்த புதுக்கோட்டை மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும். வரவிருக்கும் பிளஸ் 2 பொதுத் தேர்விலும் அதிக தேர்ச்சி பெற்று மாவட்டத்துக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்றார் உமாமகேஸ்வரி.

பெற்றோர், ஆசிரியரை மதிக்க வேண்டும்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெ.வே.அருண்ஷக்திகுமார்
விடுமுறை நாளில் தினமணி நாளிதழ் நடத்தும் வழிகாட்டல் நிகழ்ச்சிக்கு மாணவிகள் வந்திருப்பதைக் காணும் போது மனம் மிகவும் மகிழ்வாக உள்ளது.

ஓர் இலக்கை அடைய பல்வேறு வழிமுறைகள் உள்ளன. எனவே, ஒரே ஒரு வழி தான் உள்ளது என நினைப்பது தவறு. 100 சாதனை மாணவிகளின் கருத்தைக் கேட்டுப் பயன் பெற வேண்டும்.

நான் தொடக்கக் கல்வி பயின்ற போது சிறப்பு மதிப்பெண் எதையும் பெறவில்லை. வறுமையின் காரணமாக அரசுப் பள்ளியில் 7ஆம் வகுப்பு சேர்ந்த போது என்னால் படிக்க முடியும் என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தது. இதற்குக் காரணம் அரசுப் பள்ளி தான்.

நான் அதிக மதிப்பெண் எடுக்கக் காரணமும் அரசுப் பள்ளி தான். நான் எடுத்த அதிக மதிப்பெண்தான் என்னை கவுன்சலிங்கில் முன்னிலைப்படுத்தியது. கவுன்சலிங் செல்ல நல்ல ஆடையைப் பெற்றுத் தந்தது.

ஒருவன் ஒரு தலைமுறையில் கற்ற கல்வியானது அவனது ஏழு தலைமுறைக்கும் பயனுள்ளதாக இருக்கும் என்றார் திருவள்ளுவர். மாணவிகள் படிக்கும் போது நாம் மதிப்பெண்ணுக்காக ப் படிக்கிறோமா, நீட் தேர்வுக்காகப் படிக்கிறோமா என்பதைத் தெளிவாகத் திட்டம் போட்டு படிக்க வேண்டும்.

படிக்கும்போது வரி வரியாகப் படித்து திரும்பவும் சொல்லிப் பார்க்க வேண்டும். படித்துப் பார்த்ததை நான்கு பேருக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். படித்ததைக் கோடிட்டு படிக்க வேண்டும். படித்ததை நினைவில் வைத்துப் பார்க்காமல் எழுதிப் பார்க்க வேண்டும். இந்த முறையை நீங்கள் பயன்படுத்த வேண்டும்.




தேர்வில் 5 மதிப்பெண் கேள்விகளுக்குப் பதில் எழுதும் போது முக்கியமான வரிகளை அடிக்கோடிட்டு காட்ட வேண்டும். கணிதப் பாடத்தை பொறுத்த வரை நேரடியாக கணக்கு போடக் கூடாது. முதலில் சூத்திரம் எழுதி அதன் பிறகு கணிதம் போட வேண்டும். சூத்திரத்தைத் தவறவிட்டால் ஒரு மதிப்பெண் குறைந்துவிடும்.

எந்தப் பாடத்தை படித்தாலும் முழுமையாகப் படிக்க வேண்டும். திட்டம் போட்டு நீங்கள் படித்தால் நல்ல மதிப்பெண் எடுக்கலாம். நீங்கள் என்ன ஆக வேண்டும் என்பதை முதலில் முடிவெடுத்துப் படிக்க வேண்டும். தெரியாத கேள்விகளுக்கு ஆசிரியர்களிடம் பதில் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

ஒருவன் ஆயிரம் தான் பெரிய நபராக இருந்தாலும் அவனிடம் ஒழுக்கம், மரியாதைப் பண்பு இவை இரண்டும் இல்லை எனில் அவன் எப்பேர்ப்பட்ட கல்வியாளராக இருந்தாலும் யாரும் மதிக்க மாட்டார்கள். எனவே மாணவிகளாகிய நீங்கள் ஆசிரியர், பெற்றோரை மதியுங்கள். ஆசிரியர் , பெற்றோரை மதித்தால் தான் நான் முன்னுக்கு வர முடியும் என்றார் அருண்ஷக்திகுமார்.

உங்களுக்காகப் படிக்கிறீர்கள் என்பதை உணருங்கள்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த. விஜயலட்சுமி


மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காகப் படிக்க வேண்டாம். உங்களுடைய இலக்குக்காக படியுங்கள். விரும்பிப் படியுங்கள். பெற்றோர்களுக்கு நீங்கள் ஒழுக்கமுள்ளவர்களாகவும், மிகச்சிறந்த மாணவிகளாகவும் இருக்க வேண்டும்.

நீங்கள் பெற்றோர்களுக்காக ,அல்லது ஆசிரியர்களுக்காகவா படிக்கிறீர்கள், உங்களுக்காகப் படிக்கிறீர்கள் என்பதை உணர்ந்து படிக்க வேண்டும். படித்த பின்னர் என்ன ஆகப் போகிறோம் என்பதையும் திட்டம் தீட்டிப் படிக்க வேண்டும். படிக்கும் போது தன்னம்பிக்கையோடு படிக்க வேண்டும். மனதில் உறுதியோடு படிக்க வேண்டும.

சோர்ந்து போகக் கூடாது. போராடி வெற்றி பெற வேண்டும். பெண்கள் தான் நாட்டின் கண்கள் என்பதால் தான் தினமணி சார்பில் குறிப்பாக மாணவிகளை அழைத்து வந்து இந்த வழிகாட்டல் நிகழ்ச்சியை நடத்தி உள்ளார்கள்.




ஆசிரியர்கள் மீது மாணவர்கள் நம்பிக்கை வையுங்கள். தேர்வு என்பது ஒரு சாதாரண விஷயம் தான். பயம் இல்லாமல் தேர்வினை எதிர் கொள்ளுங்கள். தேர்வு வரும் போது மனதைக் குழப்பிக்கொள்ளாமல் பாடத்தைப் புரிந்து படிக்க வேண்டும். ஆசிரியர்கள் கூறும் கருத்துகளைக் கேட்டு சந்தேகங்களை நிவர்த்தி செய்ய வேண்டும்.

பள்ளி நாட்களில் விடுமுறை எடுக்க கூடாது. படிக்கும் நம் அனைவருக்கும் வேலை வாய்ப்பு உள்ளது. எனவே படித்த பிறகு நிலையான ஏதாவது ஒரு பணியில் சேர்ந்து தன்னை நிலைநிறுத்த வேண்டும் என்றார் விஜயலட்சுமி.

புதுக்கோட்டை வாசகர் பேரவையின் செயலர் பேரா. சா. விஸ்வநாதன், கல்லூரிச் செயலர் தாவூத் கனி, அறங்காவலர் அ. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நிகழ்ச்சியை தினமணி நாளிதழ் மற்றும் சிறீ பாரதி கல்வி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து, வயி. சண்முகம்பிள்ளை ஜூவல்லர்ஸ், சிங்கப்பூர் சில்க் மால், சீக்கர்ஸ் ஆகியவை இணைந்து வழங்கின.







முன்னதாக சிறீ பாரதி கல்வி நிறுவனங்களின் தலைவர் குரு. தனசேகரன் வரவேற்றார். முடிவில் எக்ஸ்பிரஸ் குழும உதவிப் பொதுமேலாளர் ஜெ. விஜய் நன்றி கூறினார்.

நாசா செல்லும் மாணவிக்குப் பாராட்டு: புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி ஜெயலட்சுமி போட்டித் தேர்வு எழுதி தேர்வு செய்யப்பட்டு நாசா விண்வெளி ஆய்வு மையத்துக்குச் செல்லவுள்ளதையொட்டி அவருக்கு தினமணி நாளிதழ் சார்பில் ஆசிரியர் கி. வைத்தியநாதன் பாராட்டினார். அப்போது, பாரதி கல்வி நிறுவனங்களின் சார்பில் ஜெயலட்சுமியின் போக்குவரத்துச் செலவுக்காக ரூ. 10 ஆயிரம் நிதியும் வழங்கப்பட்டது. அவரது பயணம் குறித்து எழுத்தாளர் நா. முத்துநிலவன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.