Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, February 6, 2020

தமிழகத்தில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 100 சதவீதம் அதிகரிப்பு, அதிர்ச்சித் தகவல்!!

தமிழகத்தில் 9 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 2017-2018-ம் கல்வியாண்டில் 100 சதவிகிதம் உயர்ந்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை அமலில் உள்ளது. 9-ம் வகுப்பு முதல் 75 சதவீத வருகைப்பதிவுடன், முழு ஆண்டுத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே மாணவர்கள் தேர்ச்சி அடைவர்.
நாட்டிலேயே மிக அதிகமாக தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் 100 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் புள்ளிவிவரங்களை வெளியிட்டிருக்கிறது.




ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கர்நாடகா மாநிலங்களை ஒப்பிடுகையில் தமிழகத்தில் 2017 - 2018-ம் கல்வியாண்டில் மட்டும், 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் 16.2 சதவீத மாணவர்கள் படிப்பை கைவிட்டதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த 2016 - 2017-ம் கல்வியாண்டில் 9 மற்றும் 10-ம் வகுப்புகளில் பயின்ற 8 சதவீத மாணவர்கள் படிப்பை பாதியிலேயே கைவிட்டுள்ளனர். 2016 - 2017-ம் கல்வியாண்டுடன் ஒப்பிடுகையில், 2017 - 2018-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் படிப்பை பாதியில் கைவிட்ட மாணவர்களின் எண்ணிக்கை 100 சதவீதம் உயர்ந்துள்ளது கல்வியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.




மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சரின் தகவலுக்கு பதிலளித்த பள்ளிக்கல்வித்துறை, வறுமை, பொருளாதார சூழல் போன்ற காரணங்களால் மாணவர்களால் படிப்பைத் தொடர முடியாத சூழல் நிலவுவதாக தெரிவித்துள்ளது. இதுபோன்று இடைநின்ற மாணவர்களை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் மூலம் SSA திட்டத்தில் சேர்த்து, தொடர்ந்து கற்பித்து வருவதாகவும் மாநில பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது.