Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, February 9, 2020

12-ம் வகுப்பைத் தொடர்ந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ப்ளு பிரிண்ட் முறை ரத்து!


12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ப்ளு பிரிண்ட் முறை ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான ப்ளு பிரிண்ட் முறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது. நீண்ட கால அடிப்படையில் கற்றலுக்கான நோக்கம் நிறைவேற ப்ளு பிரிண்ட் ரத்து பயனுள்ளதாக அமையும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.




ப்ளு பிரிண்ட் முறை என்பது என்னவென்றால் பாடப் புத்தகத்தில் 10 பாடம் இருக்கிறதெனில் அதில் குறிப்பிட்ட பாடங்களைப் படித்தால் மட்டும் அதிக மதிப்பெண்ணைப் பெற்றுவிடலாம் என்பதற்கு வழிகாட்டும் முறை. இதனால் மதிப்பெண் மட்டுமே பிரதானமாகி கற்றல் பின்னுக்குத் தள்ளப்படுகிறது.

100 சதவீத தேர்ச்சி எனக் கூறி கல்வியை விற்கும் பள்ளிகளுக்கு இந்த ப்ளு பிரிண்ட் வரப்பிரசாதமாக இருந்தது. இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் பொதுத் தேர்வில் மாநில அளவில் குறிப்பிடத்தக்க மதிப்பெண் பெற்றாலும், மேற்படிப்புகளில் அடிப்படை பாடத்தைக் கூட படிக்க முடியாமல் திணற நேரிட்டது. மேலும், தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளையும் நுழைவுத் தேர்வுகளையும் எதிர்கொள்வதிலும் சிக்கலை ஏற்படுத்தியது.




வணிக நோக்கத்துடன் மட்டும் செயல்படும் பள்ளிகளில் பயின்று பிராய்லர் கோழிகளாக மாணவர்கள் மாற்றப்படுவதைத் தடுக்க அரசு தரப்பில் பல முன்னெடுப்புகள் எடுக்கப்படுகின்றன. அதில் சில விமர்சனத்துக்குள்ளாகும் வகையில் அமைந்தாலும், சில ஆக்கப்பூர்வமாக உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை எனக் கூறுகின்றனர் கல்வியாளர்கள்.

ப்ளு பிரிண்ட் முறை நீக்கத்தால் விளையவுள்ள பயனை மாணவர்கள் உணர கொஞ்சம் பாடச்சுமையைக் குறைக்கலாம் எனவும் கல்வியாளர்கள் அறிவுறுத்துகிறார்கள். தற்போது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் சற்று தாமதம் என்றாலும் வரவேற்கத்தக்கதே எனக் கல்வியாளர்கள் கூறுகின்றனர்.