Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Join Our TELEGRAM Group

Join Our WhatsApp Group

ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே வெள்ளிக்கிழமை பதட்டம் தணிக்கப்படுமா?


முன்பெல்லாம் பள்ளிக் கல்வித்துறையின் ஆண்டு பள்ளி வேலைநாள்களுக்கான செயல்திட்டத்தினை அந்தந்த மாவட்ட முதன்மை மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் தத்தம் மாவட்டத்தில் காணப்படும் விழாக்கள் மற்றும் சிறப்பு நாள்களைக் கவனத்தில் கொண்டு ஒரு கல்வியாண்டிற்குரிய பள்ளி வேலைநாள்கள் குறித்து அறிவிக்கை வெளியிடும் வழக்கம் இருந்து வந்தது.
பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் இந்த நடைமுறையினைப் பின்பற்றி, பள்ளியைச் செம்மையுடன் வழிநடத்தி வந்தனர்.
மாவட்ட அளவில் பள்ளிகள் இயங்குவதும் விடுமுறை அளிப்பதும் எந்தவொரு சிக்கலுக்கும் வழிவகுக்காமல் ஒவ்வொரு பள்ளியும் ஆண்டு இறுதியில் மொத்தம் வேலை செய்திருக்க வேண்டிய வேலை நாள்களை நிறைவு செய்து முடித்த கதை இன்று பழங்கதை ஆகிவிட்டது.
மேற்கூறிய நடைமுறையில் ஆசிரியப் பெருமக்கள் விடுமுறை அளிக்கப்பட்ட சனிக்கிழமைகளில் தத்தம் சொந்த அலுவல் வேலைகளை இலகுவாக செய்து வந்தது குறிப்பிடத்தக்கது. அதாவது வங்கி மற்றும் அஞ்சலகம் பணிகள், மின்கட்டணம் மற்றும் தொலைபேசி கட்டணம் செலுத்துதல், பிள்ளைகள் படிக்கும் பள்ளிகளில் நடத்தப்படும் பெற்றோர் சந்திப்புக் கூட்டங்களில் கலந்துகொள்ளுதல் முதலான ஏற்கனவே திட்டமிட்டு ஒதுக்கி வைத்த குடும்பத் தலைவர் சார்ந்த பணிகளைத் திறம்படச் செய்து முடிப்பர்.
அண்மைக் காலமாகப் பள்ளிகள் அனைத்தும் ஒற்றை அதிகார எல்லைக்குள் இயங்கத்தக்க வகையில் முன்பைவிட ஆண்டு பள்ளி வேலை நாள்கள் 220 விருந்து 210 வேலை நாள்களாகக் குறைக்கப்பட்டு விட்டது. ஆனாலும், பள்ளிகள் அனைத்தும் அனைத்து சனிக்கிழமைகளிலும் வேலை நாளாக இயங்கிட அறிவுறுத்துவது என்பது ஏற்புடையதாக அமையாது.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமை வரும் போது ஆசிரியர்களும் மாணவர்களும் ஒருவித பீதியில் நாளை அதாவது எதிர்வரும் சனிக்கிழமை அன்று பள்ளிக்கு வேலைநாளா? அல்லது விடுமுறையா? என திக்திக் நொடிகளுடன் மாலை இறைவணக்கக் கூட்டம் முடிய அனைவரையும் இருக்க வைப்பது என்பது சகிப்பதற்கில்லை.
சில வேளைகளில் அலுவலகத்தில் தயார் செய்யப்பட்ட நடப்பு மாத நாட்காட்டியில் சுட்டப்பட்டிருக்கும் சனி விடுமுறையை மாணவர்களுக்கு அறிவித்த பின்னர் பறந்து வரும் சூடான மின்னஞ்சலில் அறிவிக்கப்பட்டிருக்கும் சனி வேலை நாள் அறிவிப்பை ஆற்றாமையையும் வேதனையையும் மனத்தில் புதைத்துக் கொண்டு மறு அறிவிப்பு செய்வதைப் பார்த்து மாணவர்கள் தம் முக பாவனைகளில் மூலம் வெளிக்காட்டும் சலிப்பையும் எரிச்சலையும் பார்க்க முடியாது. பள்ளிப் பாடத்தில் படித்த துக்ளக் ஆட்சி அவர்களின் நினைவில் நிழலாடும் போலும்!
பல்வேறு தற்செயல் மற்றும் சிறப்பு நிகழ்வுகள் காரணமாகக் குறைவு ஏற்பட்ட பள்ளிகள் அவற்றை ஈடுகட்டும் பொருட்டு சனிக்கிழமை அன்று வேலை நாளாகக் கொள்வது என்பது ஏற்புடையது.
போதிய வேலை நாள்களைக் கொண்டோரையும் வேண்டுமென்று பள்ளியை அன்று இயக்கச் செய்வதென்பது மனிதாபிமானமற்ற செயலாகும். இதுபோன்ற பழிவாங்கும் ஆசிரியர் விரோத நடைமுறைகளால் மாணவர்களின் நலன் பாதிக்கப்படுகிறது. படிப்பு மீது ஒருவித வெறுப்பும் சலிப்பும் உண்டாகி பள்ளி இடைநிற்றலுக்கு இது அடிகோலும் என்பது உண்மை.
எனவே, ஒரு கல்வியாண்டுக்குரிய பள்ளி வேலை நாட்காட்டியை தமிழகத்தில் உள்ள அனைத்து வகையான பள்ளிகளும் தவறாமல் பின்பற்றி வர தக்க வழிகாட்டுதல்கள் வழங்கப்பட வேண்டும். இடையில் தேவையில்லாமல் ஆவி பறக்கும் அறிவிப்புகளை விடுத்து வீண் குழப்பங்கள் ஏற்படுத்த முனையக்கூடாது. அல்லது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வந்த மாவட்ட அளவிலான பள்ளி நாட்காட்டியை உருவாக்கச் செய்து வழிகாட்டுதல் நல்லது.
அதைவிடுத்து வீணாக வெள்ளிக்கிழமை பதட்டத்திற்கு வித்திடுவது என்பது யாருக்கும் நல்லதல்ல. இதுகுறித்து சம்பந்தப்பட்டவர்கள் அனைவரும் திறந்த மனத்துடன் மாணவர் நலன் ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதையே முதன்மையாகக் கொள்ளுதல் நலம் பயக்கும். வாரத்தின் முதல் நாள் முதற்கொண்டு ஆசிரியர், மாணவர் மற்றும் பெற்றோரிடையே தகுந்த காரணங்கள் இல்லாமல் தொற்றிக்கொள்ளும் வெள்ளிக்கிழமை பீதிக்கு நிரந்தர விடைகொடுப்பது ஒன்றே நல்ல தீர்வாகும்.