Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 22, 2020

இந்த வாகனங்கள் இந்த வேகத்தில்தான் செல்ல வேண்டும் - மத்திய அரசு அதிரடி


இந்தியாவில் சாலைகளில் வாகனங்களை இயக்குவதற்கான வேக அளவை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.
இந்தியாவில் எந்தெந்த சாலைகளில் எந்தெந்த வாகனங்கள் எவ்வளவு வேகத்தில் செல்லலாம் என்று மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிர்ணயித்துள்ளது. இதுகுறித்து 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டது. அந்தப் பட்டியலின்படி, வாகனங்கள் சாலைகளில் செல்ல வேண்டிய வேகத்தின் அளவு வரையறுக்கப்பட்டுள்ளது. கார்கள் விரைவுச்சாலையில் 120 கிலோ மீட்டர் வேகம் வரையிலும், நாற்கரச் சாலைகளில் 100 கிலோ மீட்டர் வேகம் வரையிலும் செல்லலாம். நகராட்சி மற்றும் பிற சாலைகளில் கார்களை அதிகபட்சமாக 70 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கலாம்.




பேருந்துகள் உள்ளிட்ட பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் வேகம் விரைவுச்சாலையில் அதிகபட்சம் 100 கிலோ மீட்டர் என்றும், நாற்கரச் சாலைகளில் அதிகபட்சமாக 90 கிலோ மீட்டர் வேகம் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்குட்பட்ட சாலையிலும், பிற சாலைகளிலும் 60 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் இயக்கக் கூடாது.

சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களான லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை விரைவுச் சாலையிலும், நாற்கரச் சாலைகளிலும் அதிகபட்சமாக 80 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கலாம். பிற சாலைகளில் 60 கிலோ மீட்டர் வேகம் வரை மட்டுமே இயக்க வேண்டும்.




இருசக்கர வாகனங்களின் வேகம் விரைவுச் சாலை மற்றும் நாற்கரச் சாலைகளில் அதிகபட்சமாக 80 கிலோ மீட்டராக இருக்கலாம். பிற சாலைகளில் அதிகபட்சமாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கலாம்.
3 சக்கரங்கள் கொண்ட வாகனங்கள் விரைவுச்சாலைகளில் இயக்கக் கூடாது. இது தவி‌ர அனைத்து சாலைகளிலும் 3 சக்கர வாகனங்களை 50 கிலோ மீட்டர் வேகம் வரை இயக்கலாம்.
வேகக்கட்டுப்பாடுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ள போதும், சாலைகளில் விபத்துகள் அதிகரித்து வருவது மக்களிடையே வேதனையைத் தருகிறது. வேகக்கட்டுப்பாடுகளைப் பின்பற்றாததே விபத்துகளுக்கு காரணம் என்பது சமூக ஆர்வலர்கள், போக்குவரத்துத்துறை அதிகாரிகள் என பல்வேறு தரப்பினரின் கருத்தாக உள்ளது.