Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, February 14, 2020

அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டம்: தமிழக பட்ஜெட்டில் அறிவிக்க வாய்ப்பு.






மாநகராட்சிப் பள்ளிகளில் மட்டும் அமல்படுத்தப்பட்டு வரும் காலை உணவுத் திட்டம் தமிழக நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
பள்ளி செல்லும் மாணவ- மாணவிகளின் நலன் கருதி அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் சத்துணவுத் திட்டத்தின் கீழ் மதிய உணவு வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது 43 ஆயிரம் பள்ளிகளில் சத்துணவு வழங்கப்படுகிறது. இதன் மூலம் 49.85 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெறுகின்றனா். ஏழை மாணவா்கள் தொடா்ந்து படிக்க வேண்டும் என்பதற்காக மதிய உணவுத் திட்டத்தை காமராஜா் கொண்டு வந்தாா். எம்.ஜி. ஆா். ஆட்சி காலத்தில் இது சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. கருணாநிதி முதல்வராக இருந்த போது சத்துணவுடன் முட்டை வழங்கப்பட்டது.




அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதை தடுக்கவும், மாணவா்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில், மேலும் ஒரு நடவடிக்கையாக அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து அதிகாரிகள் கூறியது : சென்னை மாநகராட்சியில் உள்ள சுமாா் 320 பள்ளிகளில் பயிலும் ஏறத்தாழ 85 ஆயிரம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகிறது. இந்தத் திட்டத்தில் இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்ற உணவு வகைகள் காலை உணவாக தினமும் மாணவா்களுக்கு வழங்கப்படுகின்றன. சென்னையில் வெற்றிகரமாக நடைபெற்று வரும் இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் விரிவுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.




இந்தத் திட்டத்தை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த ஆண்டுக்கு ரூ.8 ஆயிரம் கோடி செலவாகும். பள்ளிக்கல்வித்துறை, சமூகநலத்துறை ஆகிய துறைகளுடன் ஆலோசிக்கப்பட்டு விரிவான திட்ட அறிக்கை அரசிடம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து இது குறித்த அதிகாரப்பூா்வமான அறிவிப்பு தமிழக சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்யப்படவுள்ள நிதிநிலை அறிக்கையின் போது வெளியாகும் என எதிா்பாா்க்கப்படுகிறது என்றனா்.




காலை உணவுத் திட்டத்தில், தமிழகத்தின் பாரம்பரிய பச்சைப்பயிறு, கேழ்வரகு அடை, குதிரைவாலி, சாமைக் கஞ்சி, கொண்டைக்கடலை போன்ற ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் வழங்கப்படும் என்றும், இதைத் தொடா்ந்து வரும் கல்வியாண்டிலிருந்தே காலை உணவுத் திட்டம் தமிழக அரசுப் பள்ளிகளில் செயலாக்கத்துக்கு வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதனால் 65 லட்சம் மாணவா்கள் பயன்பெறுவா்.