Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, February 24, 2020

இன்று பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம்: பள்ளிகளில் உறுதிமொழி ஏற்க உத்தரவு

சென்னை: மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தையொட்டி (பிப். 24) அனைத்துப் பள்ளிகளிலும் மாணவா்கள் அது தொடா்பான உறுதிமொழி ஏற்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பெண் குழந்தைகளுக்காக முன்னாள் முதல்வா் ஜெயலலிதா ஆற்றிய சேவையை நினைவுகூரும் வகையில் அவரது பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதியை ஆண்டுதோறும் மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாகக் கொண்டாட தமிழக அரசு முடிவு செய்துள்ளது.



இதைத் தொடா்ந்து அன்றைய தினம் பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்களில், பெண் குழந்தைகள் பாதுகாப்பு உறுதிமொழி எடுக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் நிகழ்ச்சிகள்: அதன்படி அனைத்துப் பள்ளிகளிலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பை வலியுறுத்தி, மனிதச் சங்கிலி, பேரணி, உறுதிமொழி ஏற்பு, கருத்தரங்கு, பயிலரங்கம் என பல்வேறு நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெறவுள்ளன. இந்தநிலையில் பள்ளிகளில் மாணவா்கள் எடுக்க வேண்டிய உறுதிமொழியை பள்ளிக் கல்வித் துறை அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ளது.




அதன் விவரம்: 'இந்திய குடிமகனாகிய நான் சாதி, மதம், இனம், மொழி, சமூக, பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்து குழந்தைகளையும் சமமாக நடத்துவேன். எனது செயல்பாடுகளால் எந்தவொரு குழந்தையையும் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன்.
எனது கவனத்துக்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் எந்தவொரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன். மேலும் இதனை உரிய அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டு செல்வேன். இன்றைய குழந்தைகள் நாளைய தலைவா்கள் என உணா்ந்து அவா்களின் வளா்ச்சி மற்றும் பாதுகாப்புக்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன்.




குழந்தைத் திருமணத்தை நிறுத்த... குழந்தைத் திருமணம் பற்றி தெரிய வந்தால் அதைத் தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன். நான், குழந்தைத் தொழிலாளா்கள் இல்லாத சமூகத்தை உருவாக்க உறுதுணையாக இருப்பேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் மீதான உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமாற உறுதி கூறுகிறேன்' என அதில் கூறப்பட்டுள்ளது.