Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, February 25, 2020

இனி வாட்ஸ்அப் மூலமாகவும் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யலாம்!


வாட்ஸ்அப் மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழகம் மற்றும் புதுச்சேரி நிர்வாக இயக்குனர் பி.ஜெயதேவன், தமிழகத்தில் 2.38 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை பெற்ற வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், இந்தியன் ஆயில் நிறுவனம் 1.36 கோடி பேருக்கு வினியோகம் செய்கிறது. சமையல் எரிவாயு சிலிண்டர்களை தொலைபேசி மூலம் முன்பதிவு செய்யும் முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், வாட்ஸ்அப் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.




7588888824 என்ற எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் REFILL என்று அனுப்பி சிலிண்டரை முன்பதிவு செய்யலாம். ஏற்கனவே பதிவு செய்யப்பட்டுள்ள செல்போன் எண்ணில் இருந்து இந்த சிலிண்டர் முன்பதிவை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் பேசிய அவர், சிலிண்டர் வினியோகம் செய்த உடன் சரியான கட்டணம் வசூலிக்கப்பட்டு உள்ளதா? சரியான எடையில் சிலிண்டர்கள் வினியோகிக்கப்பட்டு உள்ளதா? சிலிண்டர்களில் சீல் மற்றும் கசிவுகள் குறித்து வினியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து சரியான முறையில் சேவை அளிக்கப்படுகிறதா? என்று வாடிக்கையாளர்களின் கருத்தை அறிவதற்காக அவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் ஒரு லிங்க்கை இந்தியன் ஆயில் நிறுவனம் அனுப்புகிறது. அதில் வாடிக்கையாளர்கள் தங்களது கருத்தை பதிவு செய்யலாம்.




இதேபோல், இந்தியன் ஆயில் நிறுவன இணையதளத்திலும் வாடிக்கையாளர்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யவும் மற்றும் சந்தேகங்கள் குறித்து தெளிவு பெறவும் சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. வீட்டு உபயோக சிலிண்டர்கள் சிலவற்றை கடைகளில் பயன்படுத்தி விட்டு மீண்டும் கொண்டு வந்து வீடுகளில் வினியோகிக்கப்படுவதால் அவற்றின் எடை குறைவாக உள்ளதாக வாடிக்கையாளர்களிடம் இருந்து புகார்கள் வருகின்றன. எனவே, வாடிக்கையாளர்கள் சிலிண்டர்களை வாங்கும் போது அவற்றின் எடையை பரிசோதித்து தருமாறு சிலிண்டர் சப்ளை செய்யும் ஊழியரிடம் வலியுறுத்த வேண்டும். சிலிண்டருக்கான மானியத் தொகை குறித்த விவரம் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கும் புதிய சேவை விரைவில் தொடங்கப்படும். வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சென்னையில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும், என்று கூறியுள்ளார்.