Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, February 25, 2020

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களுக்குப் பணி : ஆட்சிமன்றக் குழுவில் முடிவு!!

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாதம் 60 ஆயிரம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் ஓய்வு பெற்ற பேராசிரியர்களை மீண்டும் நியமனம் செய்யலாம் என ஆட்சிமன்றக் குழுவின் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுவில் ஏற்கெனவே ஓய்வு பெற்றவர்களுக்குப் பல்கலைக்கழகத்தில் பணி வழங்குவதற்கு அனுமதியளித்து ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மட்டும் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் என 851 ஆசிரியர் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அவற்றில் தற்பொழுது 530 பணியிடங்களில் பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும், 300க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.




சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் நேரடியாக கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரி, கட்டிடக்கலைப் பள்ளி ஆகியவையும் 16 உறுப்புக் கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழுவின் கூட்டத்தில் (எண் 255.3) ஓய்வுபெற்ற பேராசிரியர்களை மீண்டும் பணியில் சேர்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் ஓய்வு பெற்ற மூத்த பேராசிரியர்கள், கவுரவப் பேராசிரியர்கள், வெளியிலிருந்து வந்து செல்லும் பேராசிரியர்கள் ஆகியோரை நியமனம் செய்யலாம்.




துறையில் பணியாற்றி ஓய்வு பெற்ற பின்னர், அவருடைய சேவை துறைக்குத் தேவை எனக் கருதினால் மீண்டும் ஓய்வு பெற்ற அதே நபரை நியமனம் செய்ய வேண்டும் எனத் துறைத் தலைவர் கடிதம் அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. துறைத் தலைவர், துறையில் பணியாற்றும் மற்றவர்களைக் கலந்தாலோசித்து ஓய்வு பெற்ற பேராசிரியர் பணியிலிருந்த காலத்தில் மாணவர்களுக்குக் கற்பித்தல், ஆராய்ச்சி, மாணவர்கள் மேற்பார்வை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து பேராசிரியர் நியமனம் குறித்து முதல்வருக்குப் பரிந்துரைக்க வேண்டும். அதனைக் கல்லூரி முதல்வர் துணை வேந்தருக்குப் பரிந்துரை செய்வார்.




அதனைப் பரிசீலனை செய்து துணைவேந்தர் ஒரு வருடத்திற்குள் பணி நியமனத்திற்கான அனுமதியை வழங்குவார். மேலும் அவரின் பணி ஓராண்டு துறைக்குத் தேவைப்படுவதாக துணைவேந்தர் கருதினால் மீண்டும் ஒரு வருடம் பணி நீட்டிப்பை வழங்குவார். அண்ணா பல்கலைக்கழகம், ஐஐடி, என்ஐடி, ஐஐஎஸ்சி, சிஎப்டிஎஸ் ஆகிய கல்லூரிகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் மூத்த பேராசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.

அவர்கள் ஆராய்ச்சி, சமூகத்திற்குப் பயனுள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டிருப்பதுடன், சிறந்த ஆசிரியராகவும் பணியாற்றி இருக்க வேண்டும். தொழிற்சாலைகள், ஆராய்ச்சி, மேம்பாடு போன்றவற்றில் பொது மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றியவர்கள் பகுதி நேரமாக மாணவர்களுக்கு வந்து பாடம் எடுத்துச் செல்லலாம்.




தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் பணியாற்றி, தேசிய அளவில் விருதுகளை வாங்கிய கல்வியாளர்களை மூத்த பேராசிரியர்களாகப் பணி அமர்த்தலாம். ஆராய்ச்சியாளர், தொழில் அறிஞர்கள் போன்றவர்கள் மாணவர்களின் கல்வியறிவுத் திறனை வளர்க்கும் வகையில் கவுரவப் பேராசிரியர்களாகப் பணியில் அமர்த்தலாம்.

அவ்வாறு பணியில் நியமிக்கப்படுபவர்களுக்கு மாதம் 60 ஆயிரம் முதல் 1 லட்சத்து 50 ஆயிரம் வரையில் சம்பளமாக வழங்கலாம். இந்தத் திட்டத்தில் நியமிக்கப்படும் பேராசிரியர்கள் எண்ணிக்கை 10 சதவீத்திற்கும் அதிகமாக செல்லக்கூடாது.




அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியில்லாமல் இருந்த நேரத்தில் கன்வீனர் குழு பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினைக் கவனித்து வந்தது. அப்போது பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மீண்டும் பணி வழங்கக்கூடாது என்பதில் உறுதியாக இருந்துள்ளனர். பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக சூரப்பா நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.




ஏற்கெனவே சுகாதாரத்துறையில் ஓய்வுபெற்ற மருத்துவர்கள், பேராசிரியர்களை பகுதி நேரமாக நியமிக்கும் முடிவுக்கு மருத்துவர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அண்ணா பல்கலைக்கழகமும் இதேபோன்று வெளியிலிருந்து ஓய்வு பெற்றவர்களை நியமிப்பதை பலரும் விமர்சித்துள்ளனர். இதனால் படித்து பட்டம் பெற்று இளம் பேராசிரியர்கள் பலருக்கான வாய்ப்பு தட்டிப் பறிக்கப்படுகிறது என்று ஆட்சேபம் தெரிவிக்கின்றனர்.