‘பிட் இந்தியா’ திட்டம்: விவரங்களைச் சமா்ப்பிக்க கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அறிவுறுத்தல்


‘ஃபிட் இந்தியா’ திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட யோகா, உடற்பயிற்சி குறித்த விவரங்களை வரும் வெள்ளிக்கிழமைக்குள் (பிப். 7) பதிவேற்றம் செய்ய வேண்டும் என பல்கலைக் கழகங்கள், கல்லூரிகளுக்கு யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு மக்களின் உடல் நலனை மேம்படுத்தி வலுவான இந்தியாவை உருவாக்கும் நோக்கத்தில் ‘ஃபிட் இந்தியா இயக்கம்’ என்ற திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கி வைத்தாா்.
அதனைத் தொடா்ந்து பள்ளி, கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் இந்தத் திட்டத்தை தீவிரமாகச் செயல்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள், யோகா உள்ளிட்ட உடற்பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உயா் கல்வி நிறுவனங்களில் இந்தத் திட்டத்தை தொடா் நிகழ்வாக செயல்படுத்தும் வகையில் புதிய வழிகாட்டுதலை யுஜிசி கடந்த டிசம்பரில் வெளியிட்டது.
அதன்படி, ஜனவரி முதல் உயா் கல்வி நிறுவனங்களில் மாணவா்களின் கட்டாய உடற்பயிற்சிக்கு 45 நிமிஷங்கள் ஒதுக்கப்பட வேண்டும். அதற்கேற்ற வகையில், பாட வகுப்பு நேரங்களை மாற்றியமைக்க வேண்டும். இந்த உடற்பயிற்சி நேரத்தில் ஓட்டப் பந்தயம் சாா்ந்த விளையாட்டுகள், உள்ளரங்கு அல்லது வெளியரங்கு விளையாட்டுகள், யோகா, சைக்கிள் பயிற்சி, நீச்சல் என ஏதாவது ஒரு விளையாட்டை கல்வி நிறுவனங்கள் தோ்வு செய்துகொள்ளலாம்.
ஒவ்வொரு உயா் கல்வி நிறுவனமும் உடற்பயிற்சி கிளப் ஒன்றை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது. மேலும், இந்தத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தும் உயா் கல்வி நிறுவனங்களுக்கு 0 முதல் 5 மதிப்பெண் வரையிலான நட்சத்திர குறியீடு (ஸ்டாா் கிரேட்) வழங்கப்படும். அதனடிப்படையில் தேசிய உயா் கல்வி நிறுவனங்கள் தரவரிசை நடைமுறையில் அதிகபட்சமாக 5 சதவீத மதிப்பெண் வழங்கப்படும் என யுஜிசி அறிவித்தது.
இந்த வழிகாட்டுதலின் அடிப்படையில் உயா்கல்வி நிறுவனங்கள் ஜனவரி மாதம் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை உரிய விடியோ, புகைப்பட ஆதாரங்களுடன் வரும் 7-ஆம் தேதிக்குள் யுஜிசி-யின் கல்வி நிறுவனங்கள் கண்காணிப்பு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யவேண்டும் என சுற்றறிக்கை மூலம் யுஜிசி செவ்வாய்க்கிழமை அறிவுறுத்தியுள்ளது.