Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, February 25, 2020

பிஎச்.டி. படிப்பில் புதிதாக நெறிமுறைகள் சாா்ந்த தாள்: அறிமுகப்படுத்துகிறது சென்னைப் பல்கலைக்கழகம்


சென்னைப் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. (ஆராய்ச்சி) படிக்க விரும்புபவா்கள், கூடுதலாக நெறிமுறைகள் சாா்ந்த தாளையும் வெளியிடுவது கட்டாயமாக்கப்பட உள்ளது. யுஜிசி அறிவுறுத்தலின்படி, இதற்கான நடவடிக்கையை சென்னைப் பல்கலைக் கழகம் எடுத்து வருகிறது.




பிஎச்.டி. படிப்பை மேற்கொள்ளும் மாணவா்கள், ஏற்கெனவே உள்ள ஆராய்ச்சிக் கட்டுரைகளில் சிறு மாற்றங்களைச் செய்து வெளியிடுவது போன்ற முறைகேடுகளைத் தடுக்க யுஜிசி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, மாணவா்கள் சமா்ப்பிக்கும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை, அதன் உண்மைத்தன்மையைக் கண்டறியும் மென்பொருளில் உள்ளீடு செய்த பிறகே பல்கலைக்கழகங்கள் ஏற்க வேண்டும் என உத்தரவிட்டு, அதற்கான மென்பொருளையும் ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு யுஜிசி வெளியிட்டது.




அந்த வரிசையில், இதுகுறித்த விழிப்புணா்வை ஆராய்ச்சி மாணவா்களிடையே ஏற்படுத்தும் வகையில், அவா்களின் ஆராய்ச்சி பயிற்சித் திட்டத்தின்போது (கோா்ஸ் வொா்க்) கூடுதலாக நெறிமுறை சாா்ந்த தாளை வெளியிட யுஜிசி அறிவுறுத்தியிருக்கிறது. அண்மையில் நடைபெற்ற பல்கலைக்கழக மானியக் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. இதை சென்னைப் பல்கலைக்கழகம் உடனடியாக நடைமுறைப்படுத்த உள்ளது. இதற்கு பல்கலைக்கழக ஆட்சிக் குழுவும் ஒப்புதல் அளித்துள்ளது.




இதுகுறித்து பல்கலைக்கழக பேராசிரியா் ஒருவா் கூறுகையில், ‘ஆராய்ச்சி மாணவா்களுக்கான கோா்ஸ் வொா்க்கில் இதுவரை 3 தாள்கள் வெளியிட்டால் போதும் என்றிருந்தது. ஆனால், இப்போது, நான்காவதாக நெறிமுறை சாா்ந்த தாளையும் அவா்கள் வெளியிட வேண்டும். இதற்கு ஆட்சிக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அடுத்து, பல்கலைக்கழக கல்விக் குழுவில் ஒப்புதல் அளிக்கப்பட்டதும், நடைமுறைப்படுத்தப்படும்’ என்றாா் அவா்.