Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, February 23, 2020

கல்வி ஆண்டு முதல், பள்ளி கல்வி துறையின், ஆன்லைன் மாணவர் சேர்க்கை திட்டத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இணைப்பு.


கட்டாய கல்வி உரிமை சட்டப்படி நடக்கும், இலவச மாணவர் சேர்க்கைக்கு, சி.பி.எஸ்.இ., பள்ளிகளையும், 'ஆன்லைனில்' இணைக்க, பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.மத்திய அரசின் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 14 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு, கட்டாயம் கல்வி வழங்க வேண்டும்.




பள்ளிகளில், மாணவர் சேர்க்கை மறுக்கக் கூடாது. இதை பின்பற்றியே, எட்டாம் வகுப்பு வரை,'ஆல் பாஸ்' என்ற, அனைவரும் தேர்ச்சி திட்டம் பின்பற்றப்படுகிறது.தனியார் பள்ளிகளில், கட்டாய கல்வி உரிமை சட்டத்தை பின்பற்றும் வகையில், எட்டாம் வகுப்பு வரையிலும், 25 சதவீத இடங்களில், அரசு தரப்பில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.

இந்த திட்டத்தில், தனியார் பள்ளிகள் விருப்பத்துக்கு ஏற்ப, மாணவர்களை சேர்த்து, அரசிடம் கல்வி கட்டணத்தை மட்டும் வசூலித்து வந்தன.இந்நிலையில், இத்திட்டத்தை முறைகேடுகள் இன்றி செயல்படுத்த, 'ஆன்லைன்' முறை அமலுக்கு வந்தது. அதன்படி, மெட்ரிக் இயக்குனரகம் சார்பில், 'ஆன்லைன்' வழியில், இலவச மாணவர் சேர்க்கை மேற்கொள்ளப்படுகிறது.




இந்த திட்டத்தில், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் நர்சரி பள்ளிகள் மட்டும் இணைக்கப்பட்டுள்ளன. ஆனால், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இணைக்கப்படவில்லை. கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, அந்தந்த மாநில அரசின் கட்டுப்பாட்டிலேயே, சி.பி.எஸ்.இ., பள்ளிகளும் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும்.இதை அமலுக்கு கொண்டு வரும் வகையில், வரும் கல்வி ஆண்டு முதல், பள்ளி கல்வி துறையின், ஆன்லைன் மாணவர் சேர்க்கை திட்டத்தில், சி.பி.எஸ்.இ., பள்ளிகள் இணைக்கப்பட உள்ளன.




இதற்கான பணிகளை, மெட்ரிக் இயக்குனர் கருப்பசாமி தலைமையிலான குழுவினர் மேற்கொண்டுள்ளனர். சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், 25 சதவீத இடங்களில், எந்தவித நன்கொடையும் இன்றி, தகுதியான மாணவர்கள் சேர்க்கப்படுவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த திட்டத்தை, இந்த ஆண்டாவது அமல்படுத்த வேண்டும் என, பள்ளி கல்வி அமைச்சர்செங்கோட்டையன் உத்தரவிட்டுள்ளார். எனவே, மெட்ரிக் இயக்குனரக அதிகாரிகள், இந்த பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.