Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, March 20, 2020

22ம் தேதி ஊரடங்கு! காலை 7:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை


புதுடில்லி:தொற்று நோயாகிய, 'கொரோனா' வைரஸ் என்ற, 'மஹா மாரி'யை விரட்ட, வரும், 22ம் தேதி, நாடு முழுவதும், 'மக்கள் ஊரடங்கு' நடத்த, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். ''அன்று காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, வீட்டை விட்டு யாரும் வெளியே வராமல் கட்டுப்பாடுடன் இருக்க வேண்டும்,'' என, பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்.கொரோனா வைரஸ் பரவலை தடுப்பது குறித்து, பிரதமர் மோடி, நாட்டு மக்களிடம் நேற்று, 'டிவி' மற்றும் வானொலி வழியாக உரையாற்றினார். அவர் பேசியதாவது:கொரோனா வைரசுக்கு எதிராக உலகமே போராடுகிறது. இது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்க வேண்டிய அவசியத்தை நமக்கு உணர்த்தியுள்ளது.


இந்தியா, மிகுந்த மன தைரியத்துடன் கொரோனாவை எதிர்த்து போராடி வருகிறது. கவலைநாட்டின், 130 கோடி மக்களும், கொரோனா குறித்தே பேசுகின்றனர். முதல் மற்றும் இரண்டாம் உலகப் போர்களை காட்டிலும் கொடிய பாதிப்புகளை, கொரோனா ஏற்படுத்தி வருகிறது. ஒவ்வொரு இந்தியரும், இந்த ஆபத்தான சூழ்நிலையில் விழிப்புடன் இருக்க வேண்டும்.அடுத்து வரும் சில வாரங்களுக்கு, பொதுமக்கள், அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். கடந்த, இரண்டு மாதங்களாக, கொரோனா தொற்று நோயை தடுக்க, அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும், கடந்த சில நாட்களாக, அதன் பாதிப்பு அதிகரித்துள்ளது, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருவது, பெரும் கவலையை அளித்துள்ளது. இந்த தொற்று நோய்க்கு, இதுவரை சரியான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட வில்லை; தீர்வும் காணப்படவில்லை.



இதற்கு, தற்போதைய தீர்வு, நாம் கட்டுப்பாட்டுடன் இருப்பதுதான். முதலில், இரண்டு விஷயங்களை நாம் மேற்கொள்ள வேண்டும். ஒன்று உறுதி; மற்றொன்று செயல்.அடுத்து வரும் வாரங்களில், தேவையில்லாமல், வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். கூட்டமாக சந்திப்பதை தவிர்க்க வேண்டும்.வீட்டுக்குள்ளே நாம் அனைவரும் பணியாற்ற பழகிக் கொள்ள வேண்டும்.
கோரிக்கைடாக்டர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஊடகங்களில் பணியாற்றுவோர், போலீஸ், சுகாதாரத்துறை ஊழியர்கள் போன்றோரைத் தவிர மற்றவர்கள், வீட்டிலேயே இருந்து பணி செய்ய வேண்டும். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள், கொரோனா பரவலை தடுக்க எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும். மக்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள பழகிக் கொள்ள வேண்டும். 'நான் நன்றாக இருக்கிறேன்.



என்னை கொரோனா தாக்காது; அதனால், நான், மார்க்கெட், வணிக வளாகம், தியேட்டர் என, எங்கும் செல்வேன்' என நினைப்பது தவறு. நம்மை தற்காத்துக் கொண்டால் மட்டும் போதாது; அடுத்தவர்களையும் பாதுகாக்க வேண்டும்.நம்மை தனிமைப் படுத்த, நாம் பழகிக் கொள்ள வேண்டும். மற்றவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த வகையில், நான் உங்களுக்கு ஒரு கோரிக்கை விடுக்கிறேன்.
நான் ஏதாவது கோரிக்கை விடுத்தால், நீங்கள் ஏமாற்றாமல், அதை நிறைவேற்றுகிறீர்கள். கொரோனா நோய்க்கு சரியான தீர்வு இல்லாத நிலையில், தனிமைப்படுத்திக் கொள்வது தான் ஒரே வழி. இதற்காக, சில வாரங்களை, நான் உங்களிடம் கேட்கிறேன். சோதனை ஓட்டம்வரும், 22ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, 'மக்கள் ஊரடங்கு' கடைப்பிடிக்க வேண்டும்.
அன்று காலை, 7:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, வீட்டை விட்டு யாரும் வெளியே வரக் கூடாது. 130 கோடி மக்களும், வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும்.இதன் மூலம், நாம், நம் ஒற்றுமையை, உறுதியை வெளிப்படுத்த வேண்டும். கொரோனாவை ஒழிப்பதற்கான, சோதனை ஓட்டமாக இது அமைய வேண்டும். கொரோனாவை தடுத்து நம் வலிமையை நிரூபிப்போம்.



மக்களுக்காக , மக்களே தாமாக முன்வந்து ஊரடங்கு நடைமுறையை பின்பற்றுவோம்.இந்த நேரத்தில் நாம் சிலருக்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறோம். டாக்டர்கள், மருத்துவத் துறை ஊழியர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள், போலீசார், பத்திரிகையாளர்கள், பஸ், ஆட்டோ டிரைவர்கள், உட்பட பலர், தங்களை பற்றி கவலைப்படாமல், மக்களுக்காக சேவை செய்து வருகின்றனர்.மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும், 22ம் தேதி மாலை, 5:00 மணிக்கு, வீட்டின் மொட்டை மாடியில், பால்கனியில் இருந்து, கைகளை தட்டி, மணி அடித்து, சங்கு ஊதி, அத்தியாவசிய சேவை செய்வோருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும்.அடுத்து வரும் நாட்களை, மக்கள் விழிப்புடன் எதிர்கொள்ள வேண்டும்; அலட்சியம் கூடாது. கொரோனா வைரஸ் காரணமாக ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டு விடக்கூடாது.நெருக்கடிஅத்தியாவசிய சேவை செய்வோரைத் தவிர, மற்றவர்கள் யாரும் ஞாயிற்றுக் கிழமை வெளியே வர வேண்டாம். மருத்துவர்கள், ஊடகத்துறையினர், போக்குவரத்து துறையினருக்கு, மற்றவர்கள் தொந்தரவு தர வேண்டாம்.



நோய்க்கு ஆளாகாதீர்கள். நோய்களை பரப்பாதீர்கள். இந்த முக்கியமான காலகட்டத்தில், நம் மருத்துவமனைகள் உள்ளிட்ட முக்கிய சேவைகளுக்கு, தேவையில்லாத நெருக்கடி கொடுத்துவிடக் கூடாது. வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைகளுக்கு செல்வதை தவிர்க்கவும்.
நீங்களாக சில அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்திருந்தாலும், அது அவசரம் இல்லாத நிலையில், ஒத்தி வைக்கவும்.இந்த வைரஸ், நம் பொருளாதாரத்தில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வைரசால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து பொருளாதாரத்தை மீட்க, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நடவடிக்கை குழு, அனைத்து தரப்பினருடனும், மாநிலங்களுடனும் ஆலோசனை நடத்தி, பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதை குறைக்கும்.பால், மருந்து, உணவு போன்ற அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் பாதிக்காமல் இருக்க அனைத்து முன்னச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. அதனால், பீதியில் அவற்றை அதிகமாக வாங்கி குவிக்க வேண்டாம்.இந்த இக்கட்டான நேரத்தில், நம்மையும், நாட்டு மக்களையும் பாதுகாக்க, அனைவரும் தங்களுடைய பங்களிப்பை அளிக்க வேண்டும்.



வீட்டிலிருந்து வேலை செய்பவர்களுக்கு, ஊதியத்தை குறைக்க வேண்டாம் என, தனியார் துறையினரை கேட்டுக் கொள்கிறேன். மனிதநேயம் வெல்லட்டும். இந்தியா வெல்லட்டும். இவ்வாறு, அவர் பேசினார். 14 மணி நேரம்:இந்தியாவில் 'பந்த்' அறிவிக்கப்பட்டால் காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கடை பிடிக்கப்படும். தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ள பிரதமர் மோடி அறிவித்துள்ள 'மக்கள் ஊரடங்கு' காலை 7:00 மணி முதல் , இரவு 9:00 வரை 14 மணி நேரம் கடைபிடிக்கப்பட உள்ளது.உலக தலைவர்கள் வரிசையில்'கொரோனா' வைரஸ் பாதிப்பு தொடர்பாக ஏற்கனவே சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், அமெரிக்க அதிபர் டிரம்ப், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், கனடா, பிரதமர் ஐஸ்டின் ட்ருடோ, ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல், ஆகியோர் தங்கள் நாட்டு மக்களுக்கு உரையாற்றினர். இவ்வரிசையில் இந்திய பிரதமர் மோடி நேற்று உரையாற்றினார்.

No comments:

Post a Comment