Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 19, 2020

8ம் வகுப்பு வரை தேர்வு ரத்தா? 'ஆல் பாஸ்' குறித்து ஆலோசனை


சென்னை: 'கொரோனா வைரஸ்' பிரச்னையால் எட்டாம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாணவர்களுக்கு 'ஆல் பாஸ்' வழங்குவது குறித்து பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.கொரோனா வைரஸ் தாக்கத்தால் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் மார்ச 31 வரை விடுமுறை விடப்பட்டுள்ளன. பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள் மட்டும் நடக்கின்றன.


இத்தேர்வுகள் முடிந்ததும் மொத்தமாக பள்ளிகளுக்கு விடுமுறை விட்டு விடலாமா என ஆலோசனை நடந்து வருகிறது. ஆனால் பாடங்களை நடத்தாமல் விடுமுறை விடுவதற்கு ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் எதிர்ப்பு எழுந்துள்ளன.இதுகுறித்து அவர்கள் கூறியுள்ளதாவது: அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டு புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால் புதிய பாடங்களை மாணவர்களுக்கு புரிய வைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தேர்வு நடத்தாவிட்டாலும் பரவாயில்லை. அனைத்து பாடங்களையும் நடத்த வேண்டும்.


இந்த ஆண்டுக்கான பாடங்களை நடத்தாவிட்டால் மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்லும்போது அந்த பாடங்களை முழுமையாக புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.அதேநேரத்தில் தேர்வு இல்லாமல் 'ஆல் பாஸ்' என்ற முழு தேர்ச்சி அறிவிக்கப்படுமா என பெற்றோர் எதிர்பார்த்துள்ளனர். உ.பி.யில் ஆளும் பா.ஜ. அரசு அனைத்து பள்ளிகளிலும் 8ம் வகுப்பு வரை தேர்வை ரத்து செய்து 'ஆல் பாஸ்' அறிவித்துள்ளது. அதே முடிவை தமிழக அரசும் பின்பற்ற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது

No comments:

Post a Comment