Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, March 1, 2020

தலைமை செயலக ஊழியர்களுக்கு கிடுக்கிபிடி பயோமெட்ரிக் வருகை பதிவேடு: விரைவில் அறிமுகப்படுத்த திட்டம்


சென்னை: தலைமை செயலக ஊழியர்கள் சரியான நேரத்திற்கு பணிக்கு வந்து செல்வதை உறுதி செய்யும் வகையில், பயோமெட்ரிக் மூலம் வருகை பதிவேடு செய்யும் நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் காலை 10 மணிக்கு பணிக்கு வர வேண்டும். மாலை 6 மணி வரை பணியில் இருக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது.


ஆனால், அரசு அலுவலகங்களுக்கு சென்றால், பெரும்பாலான அரசு ஊழியர்கள் தாமதமாக வருவதும், அப்படியே வந்தாலும் அதிக நேரம் இருக்கையில் இல்லாமல் அலுவலக வளாகத்தில் உள்ள டீக்கடைக்கு சென்று வருவதுமாக இருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு பொதுமக்கள் மூலம் கூறப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் பள்ளிகளில் ஊழியர்கள் வருகை பதிவேட்டை கண்காணிக்க பயோமெட்ரிக் முறை அமலில் உள்ளது. இதை பின்பற்றி அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் இந்த நடைமுறை கடந்த சில மாதங்களாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மாதத்தில் 3 நாட்கள் தாமதமாக வந்தால் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யும் நடைமுறை உள்ளது.


இந்த நடைமுறை சில அரசு அலுவலகங்களிலும் நடைமுறையில் உள்ளது. சென்னை தலைமை செயலக ஊழியர்களும், சரியான நேரத்திற்கு பணிக்கு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமாகத்தான், அரசு ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிய வேண்டும் என்று பணிகள் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை செயலாளர் ஸ்வர்ணா அனைத்து மாவட்ட கலெக்டர்கள், துறை செயலாளர்கள், துறை தலைவர்களுக்கு கடந்த 3 நாட்களுக்கு முன் உத்தரவிட்டு இருந்தார்.


அடையாள அட்டை அணியாவிட்டால், சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது. இந்த நிலையில், சென்னை தலைமை செயலக ஊழியர்கள் வருகை பதிவேட்டை கண்காணிக்க பயோமெட்ரிக் நடைமுறை விரைவில் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டு வருகிறது. பயோமெட்ரிக் முறை வந்தால், அரசு ஊழியர்கள் எத்தனை மணிக்கு அலுவலகம் வந்து செல்கிறார்கள், எத்தனை மணிக்கு பணி முடிந்து வீட்டுக்கு செல்கிறார்கள் என்பதை துல்லியமாக கண்டறிய முடியும். தாமதமாக வந்தால், அதை கணக்கிட்டு சம்பளத்தை பிடித்தம் செய்யவும் வாய்ப்புள்ளது.


அதேபோன்று, அரசு ஊழியர்கள் பணி நேரத்தின்போது இருக்கையில் இருந்து பணிகளை தொடர்கிறார்களா? என்பது குறித்து கண்காணிக்கவும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தும் திட்டமும் உள்ளதாக அரசு துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment