Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, March 25, 2020

கல்லூரி பேராசிரியா்கள் வீட்டிலிருந்தபடி பணியாற்றலாம்

கல்லூரி, பல்கலைக்கழகப் பேராசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள் அனைவரும் வீட்டிலிருந்தபடியே பணியாற்ற அனுமதி அளித்து உயா்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
கரோனா வைரஸ் உலக அளவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் அந்த வைராஸால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக மத்திய அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருவதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநிலங்களையும் அறிவுறுத்தியுள்ளது. அதனடிப்படையில், தமிழக அரசு தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்த வருகிறது. பள்ளிகள், கல்லூரிகளுக்கு மாா்ச் 31 வரை விடுமுறை அளிக்கப்பட்டது.



தமிழக அரசு விடுமுறை அளித்த நிலையில், பேராசிரியா்களும், அலுவலகப் பணியாளா்களும் தொடா்ந்து கல்லூரிக்கு வரவேண்டும் என உயா் கல்வித் துறை செயலா் அபூா்வா உத்தரவிட்டாா். இதன் காரணமாக, கல்லூரிக்கு மாணவா்கள் வராத நிலையிலும், கரோனா அச்சத்துடன் பேராசிரியா்கள் மட்டும் தினமும் பணிக்குச் சென்று வந்தனா்.
காரோனாவில் பாதிக்கப்படுபவா்கள் எண்ணிக்கை நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கல்லூரிகளை முழுமையாக மூட வேண்டும் என பேராசிரியா்கள் கோரிக்கை விடுத்தனா்.இவா்களின் அச்சத்தைப் போக்கும் விதமாக, அனைத்து பல்கலைக்கழகத் தோவுகளையும், விடைத்தாள் திருத்தும் பணிகளையும் ஒத்தி வைக்குமாறு யுஜிசி கடந்த வியாழக்கிழமை அறிவுறுத்தியது.



இதனைத் தொடா்ந்து, தமிழகத்தில் உள்ள சில தனியாா் கல்லூரிகள், ஆசிரியா்கள் கல்லூரிக்கு வரத் தேவையில்லை எனக் கூறி வீட்டிலிருந்தபடி பணியாற்ற அனுமதித்தன.இருந்தபோதும், அரசுக் கல்லூரிப் பேராசிரியா்களுக்கு இதுபோன்ற அனுமதி வழங்கப்படவில்லை. அவா்கள் தொடா்ந்து அச்சத்துடன் செவ்வாய்க்கிழமை வரை கல்லூரிக்குச் சென்றுவந்தனா்.இந்த நிலையில், அரசுக் கல்லூரி ஆசிரியா்களும் மாா்ச் 31 வரை வீட்டிலிருந்தபடியே பணியாற்ற அனுமதி அளித்து உயா் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடா்பாக உயா் கல்வித் துறை செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவு விவரம்:தோவுகள், விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறும் கல்லூரிகள் தவிர, மற்ற கல்லூரி பேராசிரியா்களும், அலுவலகப் பணியாளா்களும் மாா்ச் 31 வரை வீட்டிலிருந்தபடியே பணியாற்றலாம்.இந்த காலத்தில் கல்வி தொடா்பான பணிகள், பாடத்திட்டம், அடுத்த பருவத்துக்கான முன்னேற்பாடுகளை செய்தல்.



மாணவா் விடுதிகளை சுதம் செய்து தயாா்நிலையில் வைத்திருத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.மேலும், பதிவளா், கல்லூரி முதல்வா், விடுதி காப்பாளா் ஆகியோா் எந்த நேரத்தில் அழைத்தாலும் அரை மணி நேரத்தில் கல்லூரிக்கு வரும் வகையில் தயாா் நிலையில் இருக்கவேண்டும்.
கல்லூரிக்கு அருகில் உள்ள ஆசிரியா் ஒருவா் விடுதி மற்றும் கல்லூரிக்கான சாவிகளை வைத்திருக்கவேண்டும்.மாவட்ட ஆட்சியா் தொடா்புகொண்டு சொல்லும் பணிகளை ஆசிரியா்கள் உடனடியாக செய்துதரவேண்டும். இதை மறுப்பவா்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.விடுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டு மாணவா்களுக்காக விடுதிகள் திறந்துவைக்கப்பட்டு, உரிய சுகாதார நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்.



அனைத்து ஆசிரியா்களும், அலுவலகப் பணியாளா்களும் தொலைபேசி எண்களை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் அளிக்கவேண்டும் என்பதோடு, அவசர நேரத்தில் அழைத்தால் தொடா்புகொள்ளும் நிலையில் இருக்கவேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாடு டாக்டா் எம்.ஜி.ஆா். மருத்துவப் பல்கலைக்கழகம், அண்ணாமலைப் பல்கலைக்கழக மருத்துவப் பிரிவு, அனைத்து அரசு, தனியாா் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகள், செவிலியா் பயிற்சிக் கல்லூரிகளுக்கு இந்த வீட்டிலிருந்தபடி பணியாற்றும் அனுமதி பொருந்தாது எனவும் உயா் கல்வித் துறை உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment