Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, March 6, 2020

தமிழக பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்கள் எத்தனை பேர்? அறிக்கை தர அரசுக்கு உத்தரவு


மதுரை: தமிழகத்தில் உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் என்பது குறித்து, அரசுத்தரப்பில் அறிக்கை தர ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கரூர் மாவட்டம், தாந்தோணிமலையைச் சேர்ந்த மகேந்திரன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 87 மேல்நிலைப்பள்ளிகள், 146 உயர்நிலைப்பள்ளிகள் உள்ளன. இதில், 32 மேல்நிலைப்பள்ளிகளிலும், 46 உயர்நிலைப்பள்ளிகளிலும் தலைமையாசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 146 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதில், கணினி பயிற்றுநர், உடற்கல்வி ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் அடங்கும்.
அதிகப்படியான காலியிடத்தால், பணியில் உள்ளோர் கூடுதல் பணிச்சுமையுடன் பணியாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. பணியிலுள்ளவர்கள் உயர் அதிகாரிகளின் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டிய நிலையால், மாணவர்களுக்கு முறையாக கற்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவ, மாணவியர் விடுதிகளில் காப்பாளர் உள்ளிட்ட சுமார் 1,800க்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன.



இதேபோல், ஆதிதிராவிடர் நலத்துறையில் பணியாற்றும் பலருக்கும் பணியிட மாறுதல், பதவி உயர்வு உள்ளிட்டவையும் வழங்கப்படாமல் உள்ளது.
இதனால், ஆதிதிராவிடர் விடுதிகளில் தங்கிப்பயிலும் மாணவ, மாணவிகளின் கல்வி பெரிதும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகள் மற்றும் விடுதிகளில் உள்ள காலியிடங்களை நிரப்பவும், பதவி உயர்வு மற்றும் பணி மாறுதல் வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் வக்கீல் சிவராம் ஆஜராகி, ''அதிகரிக்கும் காலியிடங்களால் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது'' என்றார். இதையடுத்து நீதிபதிகள், ''தமிழகத்தில் பள்ளி கல்வித்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்கள் எத்தனை உள்ளது என்பது குறித்து, அரசுத்தரப்பில் அறிக்கையை பதில் மனுவாக தாக்கல் செய்ய வேண்டும்'' என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 19க்கு தள்ளிவைத்தனர்.

No comments:

Post a Comment