Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, July 18, 2016

பரிவருத்தனை அணி


22. பரிவருத்தனை அணி

பரிவருத்தனை அணி என்பது ஒரு பொருளைக் கொடுத்து, வேறு ஒரு பொருளைக் கைம்மாறாகக் கொள்ளும் செய்தியைச் சொல்லுவது ஆகும்.
பொருள்பரி மாறுதல் பரிவருத் தனையே --(தண்டியலங்காரம், 87)
பரிவருத்தனை - ஒன்று கொடுத்து வேறு ஒன்று வாங்குதல். இது மூவகைப்படும் என்று கூறுவாரும் உளர். அவை, கொடுத்தது குறைவாய்க் கொண்டது மிகையாய் இருத்தல், கொடுத்தது மிகையாய்க் கொண்டது குறைவாய் இருத்தல், கொடுத்ததும் கொண்டதும் சமமாய் இருத்தல் என்பன.

.கா.1
     காமனை வென்றோன் சடைமதியும் கங்கையும்
     தாம நிழல்ஒன்று தாம்கொடுத்து, - நாமப்
     பருவாள் அரவின் பணமணிகள் தோறும்
     உரு ஆயிரம் பெற்றுள
(காமன் - மன்மதன்; காமனை வென்றோன்- சிவபெருமான்; தாம- தம்முடைய; நிழல்- உருவம், (எதிரொளிக்கும்) பிம்பம்; நாமம்- அச்சம்; வாள்- ஒளி; பணம் - படம்.)

பாடல்பொருள்:
மன்மதனை வென்ற சிவபெருமானுடைய சடையில் தங்கியிருக்கும் பிறைமதியும், கங்கையும் தம்முடைய நிழல் (உருவம்) ஒன்றை மட்டும் தாம் கொடுத்து, அப்பெருமான் அணிந்த அச்சத்தைத் தரும் பாம்பின் படங்களில் பெரியதாய் இருக்கும் ஒளியினை உடைய மணிகள்தோறும், தத்தம் உருவம் எதிரொளிப்பதால் ஆயிரம் ஆயிரம் உருவங்களைப் பெற்றன.

அணிப் பொருத்தம்:
இப்பாடலில், பிறைமதியும், கங்கையும் ஒவ்வோர் உருவம் மட்டுமே கொடுத்து, ஆயிரம் ஆயிரம் உருவங்களைப் பெற்றன எனப் பரிமாறுதல் கூறப்பட்டிருத்தலின் இது பரிவரித்தனை அணி ஆயிற்று. இது, கொடுத்தது குறைவாய்க் கொண்டது மிகையாய் இருத்தல் என்னும் முறையில் அமைந்த பரிவரித்தனை அணி.

இப்பாடல் மட்டுமே பரிவருத்தனை அணிக்குத் தண்டியலங்கார உரையில் சான்றாகக் காட்டப்படுகிறது. தமிழ் இலக்கியங்கள் பலவற்றில் இவ்வணி அமைந்திலங்குகிறது. சான்றாகத் திருக்குறளில் இருந்து ஒரு குறள் வழிநின்று காண்போம்.
.கா.2
     சாயலும் நாணும் அவர்கொண்டார் கைம்மாறா
     நோயும் பசலையும் தந்து  --(திருக்குறள், 1183)

இது, தலைவன் தன்னைப் பிரிந்தமையால் பசலையுற்று வருந்திய தலைவி புலம்பிக் கூறியதாக அமைந்தது.

பாடல்பொருள்:
காம நோயையும் பசலை நிறத்தையும் எனக்குக் கைம்மாறாகக் கொடுத்துவிட்டு, என் சாயலையும் நாணத்தையும் அவர் என்னிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

அணிப் பொருத்தம்:

இப்பாடலில் தலைவன் தலைவிக்குக் கொடுத்தனவும், அவளிடம் இருந்து கொண்டனவும் சமமாகக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம். இது, கொடுத்ததும் கொண்டதும் சமமாய் இருத்தல் என்னும் முறையில் அமைந்த பரிவருத்தனை அணி ஆகும்.