Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, April 12, 2017

CBSE-க்கு இணையாக தமிழக பாடத்திட்டம் மாற்றம்


மத்திய அரசின் சி.பி.எஸ்.இ., பாடங்களுக்கு இணையாக, தமிழகத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதற்கான புத்தக தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன.


தமிழகத்தில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், 2006 முதல் அமலில் உள்ளது. இந்த பாடத்திட்டம், 2003ல் தயார் செய்யப்பட்டது. எனவே, 14 ஆண்டுகள் பழமையான பாடத்திட்டத்தை, தமிழக மாணவர்கள் படித்து வருகின்றனர். புதிய பாடத்திட்டம், 2013ல் தயார் செய்யப்பட்டு, தமிழக அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. ஆனால், அரசு ஒப்புதல் வழங்காமல், கிடப்பில் போட்டது.
 

இந்நிலையில், மருத்துவ படிப்புக்கான, 'நீட்' தேர்வு, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் கட்டாயமாகியுள்ளது. இந்த தேர்வில், மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற, 54 வகை பாடத்திட்டங்களில் இருந்து, கேள்விகள் இடம்பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு ஈடுகொடுக்கும் வகையில், தமிழக பாடத்திட்டம், 'அப்டேட்' செய்யப்படவில்லை. எனவே, பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் என, கல்வியாளர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். இதுபற்றி, நமது நாளிதழில், பல முறை செய்திகள் வெளியாகின. இந்நிலையில், சி.பி.எஸ்.இ.,க்கு ஈடாக, புதிய பாடத்திட்டம் தயார் செய்யும் பணியை, பள்ளிக் கல்வித்துறை துவங்கியுள்ளது. முதற்கட்டமாக, சி.பி.எஸ்.இ.,யின், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 பாட புத்தகங்களின் அம்சங்கள், தமிழக பாட புத்தகங்களில் உள்ளனவா என, ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்களை, தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைத்துள்ள ஆசிரியர் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த பாட புத்தகங்களில், ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் உள்ள அம்சங்களை, தமிழில் மொழி பெயர்க்கும் பணி துவங்கியுள்ளது.
வரும் கல்வி ஆண்டுக்கான பாட புத்தகங்கள், ஏற்கனவே அச்சிடப்பட்டுள்ளன. எனவே, பழைய புத்தகங்களை மாற்ற முடியாது. ஆனால், பிளஸ் 1 பாட புத்தகத்தில், சி.பி.எஸ்.இ.,யிலுள்ள சில பகுதிகளை கூடுதலாக சேர்க்கலாமா என, அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். 
மே இறுதியில், இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என, கூறப்படுகிறது.