Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 23, 2017

டி.இ.டி., தேர்வில் பிரிஸ்கிங் முறையில் சோதனை: தமிழகத்தில் முதன் முறையாக அமல் (Dinamalar)


ஈரோடு: ''ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வருவோரை, முழுமையாக தடவி பார்த்து (பிரிஸ்கிங் முறை) பரிசோதித்த பிறகே, தேர்வறைக்குள் அனுமதிக்கப்படுவர்,'' என்று, பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் பாலமுருகன் கூறினார்.

பள்ளி கல்வி இயக்ககம் சார்பில், ஆசிரியர் தகுதித்தேர்வு (டி.இ.டி.,) வரும் 29, 30 ஆகிய தேதிகளில் நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில், தாள்-1 தேர்வுக்கு, 8,171 பேரும், தாள்-2 தேர்வுக்கு, 15 ஆயிரத்து, 671 பேரும் விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்காக, 49 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு கண்காணிப்பில், 1,300 ஆசிரியர்கள், பிற துறை அலுவலர்கள் ஈடுபடுகின்றனர். இவர்களுக்கு ஈரோட்டில் கடந்த, இரு நாட்களாக பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் பாலமுருகன் கூறியதாவது: தேர்வு எழுதுவோர், தங்கள் உடையில், உடலில் மறைத்து ஏதேனும் எடுத்து செல்கிறார்களா? என்பதை கண்டறியும் விதமாக, உடலை தடவி பார்த்து முழுமையாக பரிசோதனை (பிரிஸ்கிங்) செய்யப்படும். தமிழகத்தில் தேர்வுக்கு இம்முறையை பயன்படுத்துவது இதுவே முதல் முறை. ஆண்களுக்கு ஆண் போலீசாரும், பெண்களுக்கு பெண் போலீசார், ஊர்காவல் படையை சேர்ந்தவர்கள், என்.சி.சி. மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவியர் பயன்படுத்தப்படுவர்.

 தேர்வு எழுதுவோர் மட்டுமின்றி, அறை கண்காணிப்பாளர்களும் எலக்ட்ரானிக் வாட்ச், பேஜர், மொபைல்போன், கால்குலேட்டர் மட்டுமின்றி கர்சீப்பையும் அறைக்குள் எடுத்துச் செல்லக்கூடாது.ஹால் டிக்கெட் கிடைக்க பெறாதவர்கள், வெப்சைட்டில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் கிடைக்கப் பெறாதவர்கள், வெள்ளைத்தாளில் போட்டோ ஒட்டி, அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகளிடம் கையெழுத்து, பெற்று வந்தால் தேர்வு எழுதலாம். தேர்வு நடக்கும் அறைக்குள், மொபைல்போன் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.