Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, July 27, 2017

அப்துல் கலாம் பற்றி சில அரிய தகவல்கள்


இந்தியாவின் 11-வது குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் நேற்று மாலை மேகாலயா ஐ.ஐ.எம்மில் மாணவர்களுக்கிடையே உரையாற்றிக் கொண்டிருந்த போது மாரடைப்பால் மயங்கி விழுந்தார். உடனடியாக ஷில்லாங்கின் பெதானி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரை பற்றி சில அரிய தகவல்கள்....

• நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.

• இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.

• அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.

• அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.

• இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’

• அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படாவிட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.

• அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு டம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.

• அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.

• அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சிலவற்றை அவர் தெரிந்து வைத்திருந்தார்.

• 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.

• இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டவையாகும்.

போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டுபிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.

• அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.

• சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–க்களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.

• அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.

அன்னல் ஒவ்வொரு நொடியும் நம்முடன் வாழ்ந்துக்கொண்டே தான் இருக்கின்றார். அவருக்கு இறப்பு என்பதே இல்லை