Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, January 15, 2018

மாயமாகும் மூட்டுவலி


வயதானவர்கள் மட்டுமின்றி, இளவயதினர் பலரும், மூட்டு வலியால் அவதிப்படுவதை காண முடிகிறது. இதற்கு பல வகையில் வைத்தியம் பார்த்தும், பலனில்லாமல் கஷ்டப்படுகின்றனர். ஆனால், இயற்கை முறை வைத்தியத்தில் நல்ல பலன் கிடைக்கிறது.

சுக்கை நன்றாக அரைத்து, கொதிக்க வைத்து, காலை, மாலை இரு வேளையும் மூட்டுகளில் பத்து போடவும். பிரண்டை இலை, முடக்கத்தான் இலை, சீரகம் மூன்றையும், தலா, 10 கிராம் அளவு எடுத்து அரைத்து, காலையில் சாப்பிட்டு வந்தால், மூட்டு வலி, மூட்டுத் தேய்வு குறையும். முடக்கற்றான் இலைகளை எடுத்து, நெய்யில் வதக்கி சாப்பிட்டு வந்தால், மூட்டு வலி குறையும். குப்பைக் கீரை, முடக்கத்தான் கீரை, சீரகம் மூன்றையும் சேர்த்து, கஷாயம் வைத்து குடித்தால், மூட்டு வலி குறையும். கசகசா, துத்தி இலையை சேர்த்து விழுதாக அரைத்து, கால் மூட்டுகளில் தடவினால் வலி குறையும்.

வேப்பிலை: வேப்பிலை, வில்வ இலை, துளசி, அருகம்புல், வெற்றிலை ஆகியவற்றை நன்கு சுத்தம் செய்து, பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதை, தினமும், 2 கிராம் தேனில் குழைத்து சாப்பிட்டுவர மூட்டுவலி குறையும். வேப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சம அளவு எடுத்து சூடாக்கி, மூட்டுவலியுள்ள இடத்தில் தடவி வர, வலி குறைவது தெரியும். நொச்சி இலை சாறை எடுத்து, மூட்டுவலி உள்ள இடத்தில் பூசினால் வலி குறையும்.

 குப்பைமேனி இலைகளை அரைத்து சாறெடுத்து, அதனுடன், எலுமிச்சை சாறு கலந்து, மூட்டு வலி மேல் பூசினால் பலன் கிடைக்கும்.

அத்தி இலையை அரைத்து, மூட்டில் வைத்து தினமும் கட்ட, நிவாரணம் கிடைக்கும். எள் எண்ணெய், வேப்ப எண்ணெய், கடுகு எண்ணெய், தேங்காய்
எண்ணெய், சுக்குபொடி, மிளகுபொடி ஆகியவற்றை, தைலம் பதம் வரும் வரை காய்ச்சி, ஆறியதும், வலி உள்ள இடத்தில் தடவி, வெந்நீரில் குளிக்க பலன் கிடைக்கும்.

தேனும் இஞ்சியும்...! சுக்கு, தனியா, வெல்லம், சீரகம் ஆகியவற்றை இடித்து சாப்பிடலாம். கற்பூரத்துடன், புதினா இலை சாறை கலந்து, வலி உள்ள இடத்தில் தடவி வரலாம். சுக்கு, ஆவாரம் பட்டை சம அளவு எடுத்து, நீர் விட்டு காய்ச்சி, ஆற வைத்து சாப்பிடலாம். காலையில், சிறிதளவு தேனும், இஞ்சி சாறும் கலந்து சாப்பிட்டால், கை, கால் வலி குணமாகும். தூதுவளை இலையை மைபோல் அரைத்து சிறிதளவு எடுத்து பசும்பாலில் கலந்து, காலை, மாலை சாப்பிட்டு வர, கை, கால் வலி குணமாகும்.