Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 15, 2018

சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.


அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களை கற்றுக்கொடுக்க சிறப்பாசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இதுவரையில் சிறப்பாசிரியர் பணியிடங்கள் பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முதல்முறையாக சிறப்பாசிரியர் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி சிறப்பாசிரியர்களை தேர்வுசெய்ய அரசு முடிவு செய்தது.


இதைத்தொடர்ந்து, உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய பாடங்களில் 1,325 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 27 முதல் ஆகஸ்டு 18-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பெறப்பட்டன. செப்டம்பர் மாதம் 23-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 35,781 பேர் எழுதினர்.


எழுத்துத்தேர்வு முடிந்தவுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் கீ ஆன்சர் எனப்படும் உத்தேச விடைகளை வெளியிடுவது வழக்கம். அதன்படி, அக்டோபர் 10-ம் தேதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டது. பொதுவாக கீ ஆன்சர் வெளியிட்ட அடுத்த சில வாரங்களில் தேர்வு முடிவும், இறுதி விடைகளும் வெளியிடப்படும். ஆனால், சிறப்பாசிரியர் தேர்வில், கீ ஆன்சர் வெளியிட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.


இந்நிலையில் இன்று சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.  மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளர்.