Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 29, 2018

ஒற்றைத் தலைவலி, நீர் கோத்தல் பிரச்னைக்குத் தீர்வாகும் சாலையோர மூலிகை ’நல்வேளை’!


உணவே மருந்து, மருந்தே உணவு என்ற நமது வாழ்வியல் முறையைக் கைவிட்டதன் விளைவாக, மருத்துவமனை வாசல்களில் கால்கடுக்க நின்றுகொண்டிருக்கிறோம். ஆனால், நாம் அன்றாடம் கடந்து செல்லும் சாலையோரங்களில், தெருக்களில், குப்பைமேடுகளில் இலவசமாக விளைந்து கிடக்கின்றன பெரும்பாலான நோய்களுக்கான தீர்வுகள். "காலடியில் கிடக்கும் காயகற்பங்கள் அய்யா நம் மூலிகைகள்" என இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அடிக்கடி சொல்வார். உண்மைதான், நம் காலடியில் இலவசமாகக் கிடப்பதால் நாம் அவற்றை மதிப்பதேயில்லை. ஆனால், அந்த சின்னஞ்சிறிய செடிகளுக்கும்தான் அத்தனை மருத்துவ குணங்களும் மிகுந்து கிடக்கின்றன. அப்படிப்பட்ட அற்புதமான மூலிகைகளுள் ஒன்றுதான் நல்வேளை.



இந்த மூலிகையைப் பற்றி தெரிந்துகொண்டாலே இனி உங்களுக்கு நல்லவேளைதான். 
Cleome gynandra என்ற தாவரவியல் பெயர்கொண்ட நல்வேளை, சாலையோரங்களில் சர்வசாதாரணமாக பார்க்கலாம். சென்னை போன்ற பெருநகரங்களில்கூட இந்த மூலிகைகள் முளைத்துக் கிடக்கின்றன. நாய்க் கடுகு செடியைப் போலவே இருக்கும், இந்த மூலிகையைப் பலரும் நாய்க்கடுகு என்றே நினைத்துக்கொள்வார்கள். நாய்க்கடுகு காய்களும் இதன் காய்களும் ஒரே தோற்றத்தில் இருந்தாலும், பூக்கள், இலைகளை வைத்து வித்தியாசம் தெரிந்துகொள்ளலாம். நாய்க்கடுகு பூக்கள், மஞ்சள் நிறத்தில் ஒற்றைப் பூவாக இருக்கும். நல்வேளை பூக்கள் வெண்மை நிறத்தில் சிறிய சூல்களுடன் இருக்கும். நல்வேளை இலைகள் சிறியதாக இருக்கும். நாய்க்கடுகு இலைகள் சற்று பெரியதாக இருக்கும். இதை வைத்து அடையாளம் கண்டுகொள்ளலாம்.