மாணவர்கள் பள்ளிக் கல்வியுடன் படிப்பை நிறுத்தி விடாமல் , கல்வித் தகுதியை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் உயர்கல்வி படிப்புடன் ஆராய்ச்சித் திறனையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கேட்டுக் கொண்டார்.
சென்னையை அடுத்த கழிப்பட்டூர் ஆனந்த் உயர்தொழில்நுட்பக் கல்லூரி, தேசிய அறிவியல் தொழில்நுட்ப மையம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து, புதன்கிழமை நடத்திய பள்ளி மாணவர்களுக்கான மாதிரி கண்காட்சிப் போட்டி விழாவை தொடங்கி வைத்து பேசியது:
தமிழகத்தில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கை இந்திய அளவில் மட்டுமல்லாமல், உலக அளவிலும் அதிக எண்ணிக்கையை எட்டிப் பிடித்திருப்பதற்கு அடிப்படையாக பள்ளிக் கல்வித் துறையும் ஒரு முக்கிய காரணமாகத் திகழ்ந்து வருகிறது.
தமிழ்நாட்டில் உயர்கல்வி பெறுவோரின் எண்ணிக்கையை இன்னும் உயர்த்தும் நோக்குடன் கலை, அறிவியல் கல்லூரிகளின் எண்ணிக்கையையும், அங்கு போதிக்கப்படும் புதிய படிப்புகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க உரிய நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தமிழகமெங்கும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி மாணவர்களின் மாதிரிப் படைப்புகள் புதுமையாகவும், வியந்து பாராட்டத்தக்க அளவிலும், ஆராய்ச்சியில் நாங்கள் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று பிரகடனப்படுத்தும் வகையிலும் உள்ளன என்றார் அமைச்சர் கே.பி.அன்பழகன்.


