Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, June 27, 2018

பி.இ. கலந்தாய்வுக் கட்டணத்தை வரைவோலையாகப் பெற வேண்டும்

பி.இ. படிப்புகளுக்கான கலந்தாய்வுக் கட்டணத்தை வரைவோலையாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், பி.இ. படிப்புக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்ற தமிழக அரசின் அரசாணையை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலரசன், வழக்குரைஞர் பொன்.பாண்டியன் மற்றும் முரளி ஆகியோர் வழக்குத் தொடர்ந்திருந்தனர்.




இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற கோடை விடுமுறைக் கால அமர்வு, பி.இ. படிப்புக்கான விண்ணப்பக் கட்டணத்தை வரைவோலையாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ் மற்றும் எம்.தண்டபாணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அண்ணா பல்கலைக்கழகத்தின் சார்பில் ஆஜரான கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞர் பி.ஹெச். அரவிந்த் பாண்டியன், பி.இ. படிப்புக்காக 1 லட்சத்து 59 ஆயிரத்து 580 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 12 ஆயிரத்து 310 பேர் 42 உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பித்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 47 ஆயிரம் பேர் இணையதளம் வழியாகவும், 270 பேர் வரைவோலை மூலமாக விண்ணப்பக் கட்டணங்களைச் செலுத்தி உள்ளனர் என்றார்.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.வில்சன், பி.இ. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வுக் கட்டணத்தையும் வரைவோலையாகப் பெற்றுக் கொள்ள உத்தரவிட வேண்டும் என்றார்.
இதனையடுத்து வழக்கை விசாரித்த நீதிபிகள், பி.இ. படிப்புக்கான கலந்தாய்வுக் கட்டணத்தையும் வரைவோலையாகப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதே போன்று பி.இ. கலந்தாய்வு முடியும் வரை 42 உதவி மையங்களும் செயல்பட வேண்டும். மேலும், இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த அமர்வு பிறப்பித்த உத்தரவுகளையும் முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.