Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, July 14, 2018

CPS ரத்து - நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் - கல்வி அமைச்சர்


ஈரோடு மாவட்டம் கோபி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கூடங்களில் ‘ஸ்மார்ட்’ வகுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதன் தொடக்க விழா அந்தந்த பள்ளிக்கூடங்களில் நடந்தது.

விழாவுக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் தலைமை தாங்கினார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை கணினி மயமாக்கப்பட்டு இணையதளம் மூலம் ஒன்றிணைக்கப்பட்டு கல்வி கற்றுக்கொடுக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் 5 ஆயிரத்து 200 பள்ளிக்கூடங்களில் ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்பட்டு வருகிறது. 

12-ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தில் ‘திறன் வளர்ப்பு பயிற்சி’ தொடர்பான புதிய பாடத்தை சேர்ப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மாநிலம் முழுவதும் முதல் கட்டமாக 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் 11 லட்சத்து 70 ஆயிரம் மாணவ- மாணவிகளுக்கு கையடக்க கணினி (டேப்லட்) விரைவில் வழங்கப்பட உள்ளது.

அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க மாணவர்களுக்கு இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும். இதற்காக லண்டனில் இருந்து 100 பேராசிரியர்கள் தமிழகம் வந்து இந்த மாதம் முதல் ஆங்கில பயிற்சி வகுப்பு எடுக்க உள்ளனர். விரைவில் தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களிலும் ஐ.ஏ.எஸ். தேர்வு பயிற்சி மையங்கள் தொடங்கப்படும்.

தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி இருந்தபோதிலும் திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. ஆசிரியர்கள் தங்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். 

கல்வித்துறையில் பல்வேறு பிரிவுகளில் 3 லட்சத்து 72 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகிறார்கள். நிதி நிலைமையை கருத்தில் கொண்டு ஆசிரியர்களின் கோரிக்கைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.