Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, August 22, 2018

போலிச் சான்றிதழில் பேராசிரியர்கள் நியமனம்!


அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீட்டில் நடந்த முறைகேட்டைத் தொடர்ந்து பேராசிரியர்கள் நியமனத்திலும் முறைகேடு நடந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் தேர்வு வாரியம் மூலம், கடந்த 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் அரசுக் கல்லூரிகளில் காலிப்பணியிடங்களுக்கு உதவிப் பேராசிரியர்கள் 1,000 பேர் நியமனம் செய்யப்பட்டனர்.



சான்றிதழில் சந்தேகம்

அப்போது, பொன்னேரி அரசுக் கல்லூரிக்கு திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவர் உதவிப் பேராசிரியராகப் பணி நியமனம் செய்யப்பட்டார். அவர், இயற்பியல் துறை உதவிப் பேராசிரியராக 3 ஆண்டுகள் வேலைபார்த்து வந்தார். அவர் சமர்ப்பித்த சான்றிதழ்கள் மீது திடீரென்று சந்தேகம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவருடைய சான்றிதழ்களைக் கல்லூரிக் கல்வி இயக்குனரக அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவர் பணியில் சேரும்போது, பிகார் மாநிலத்தைச் சேர்ந்த தனியார் பல்கலைக்கழகத்தில் பி.எச்டி. பட்டம் பெற்றதாகச் சான்றிதழ்கள் கொடுத்திருந்தார். அந்த சான்றிதழ்கள் பிகார் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.அதை ஆய்வு செய்த பிகார் பல்கலைக்கழக நிர்வாகம், அது தங்கள் பல்கலைக்கழகம் வழங்கிய சான்றிதழ் அல்ல; போலியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தது.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட உதவிப் பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கல்லூரிக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டது. அதன்பேரில் பொன்னேரி அரசு உலகநாத நாராயணசாமி கல்லூரி முதல்வர் போலீசில் புகார் செய்தார். பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று பேராசிரியர் மகாலிங்கத்தைக் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர்.



போலி சான்றிதழ்கள்

இதற்கு முன் 2014ஆம் ஆண்டு சென்னையில் உயர் கல்வித்துறையைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் வீட்டில் இருந்து ஏராளமான போலிச் சான்றிதழ்கள் கைப்பற்றப்பட்டன. 2016ஆம் ஆண்டு நாமக்கல் அரசுக் கல்லூரியில் பிகார் பல்கலைக்கழகம் பெயரில் போலிச் சான்றிதழ் கொடுத்து 2 பெண் பேராசிரியைகள் பணியில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுபற்றி விசாரணை நடத்தியதில், 2 பேராசிரியைகளும் பணம் கொடுத்து போலியாகச் சான்றிதழ் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ச்சியாக, போலிச் சான்றிதழ் விவகாரம் வெளிவந்து கொண்டு இருப்பதால் அனைத்துப் பணி நியமனங்கள் தொடர்பாகவும் சான்றிதல்களைச் சரிபார்க்க கல்லூரிக் கல்வித் துறை இயக்குனரகத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

சான்றிதழ்கள் சரிபார்ப்புப் பணி

2015ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் பல்வேறு அரசுக் கல்லூரிகளில் பணி நியமனம் பெற்ற 1,000 உதவிப் பேராசிரியர்களின் சான்றிதழ்கள் தீவிரமாக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. கைதான பேராசிரியர் மகாலிங்கத்திடம் விசாரணை நடத்தியதில், இடைத்தரகர்கள் மற்றும் பிகார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இளநிலை அலுவலர்கள் மூலம் போலிச் சான்றிதழ்கள் பெற்றது தெரிய வந்துள்ளது.

பிகார் பல்கலைக்கழகம் வழங்கியது போன்றே, இந்தச் சான்றிதழ்கள் அமைந்துள்ளன. அப்பல்கலைக் கழகத்தின் சின்னம் மற்றும் சான்றிதழ் விவரங்களை, அங்குள்ள ஊழியர்கள் சிலரே நகல் எடுத்து வழங்கியுள்ளனர். இந்த விவகாரத்தில், பேராசிரியர்களுக்கும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கும் இடையே இடைத்தரகர்கள் செயல்பட்டு வந்துள்ளனர்.



போலிச் சான்றிதழுக்குப் பணம்

ஒரு சான்றிதழுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை இடைத்தரகர்கள் பணம் பெற்று இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. “ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பேராசிரியர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்வதால், சான்றிதழ்களை உடனடியாகச் சரிபார்ப்பது கடினம். அது இடைத்தரகர்களுக்கும், பேராசிரியர்கள் பணியில் சேருபவர்களுக்கும் வசதியாக அமைந்து விடுகிறது. பின்னர், சான்றிதழ்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் போது சிக்கிக் கொள்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளனர் விசாரணை அதிகாரிகள்.

போலிச் சான்றிதழ் விவகாரம், பிகாரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து, பிகார் மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அப்பல்கலைக்கழக ஊழியர்கள் பலர் தலைமறைவாகி விட்டனர்.