Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 28, 2018

ஐந்து பள்ளி களில் இல்லை 'தலை!' நிர்வாக பணிகளில் சுணக்கம்!


கோவை, அக். 27-கோவையில், ஐந்து மாநகராட்சி உயர்நிலைப்பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடம், ஓராண்டுக்கும் மேலாக காலியாக இருப்பதால், நிர்வாக பணிகள் மட்டுமல்லாமல், கற்பித்தல் தொடர்பான பணிகளும் சுணக்கமாக நடப்பதாக, புகார் எழுந்துள்ளது.



கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில், 83 பள்ளிகள் உள்ளன. இதில், உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடம் நிரப்புவதில் உள்ள, குளறுபடிகள் காரணமாக, கடந்த இரு ஆண்டுகளாக, வழக்கு நிலுவையில் இருந்தது.

இதனால், பொறுப்பு தலைமையாசிரியர்களே, நிர்வாக பணிகளை கவனித்து வந்தனர். தலைமையாசிரியர் பணியிடம் நிரப்ப, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, தீர்ப்பு வெளியானது.பள்ளிக்கல்வித்துறையில் கலந்தாய்வு நடத்தி, உடனே காலியிடங்கள் நிரப்பப்பட்டன. 

ஆனால், மாநகராட்சி பள்ளிகளில், வழக்கு தீர்ப்பை காரணம் காட்டி, காலியிடங்கள் நிரப்ப தயக்கம் நீடிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால், நிர்வாக பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.



தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சங்க மாநில ஆலோசகர் பாலகிருஷ்ணன் கூறுகையில், ''கோவை மாநகராட்சிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம் காதுகேளாதோர் பள்ளி, அனுப்பர்பாளையம், செல்வபுரம் பெண்கள் பள்ளி, மணியகாரம்பாளையம், வரதராஜபுரம் உள்ளிட்ட, ஐந்து மாநகராட்சி பள்ளிகளில், தலைமையாசிரியர் இல்லை. 

''மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரிவோரில், சீனியாரிட்டி வெளியிட்டு, கலந்தாய்வு நடத்துவது எளிதான நடைமுறைதான். இதை செய்யாததால், சீனியாரிட்டி பட்டியலில் காத்திருப்போர் எண்ணிக்கை நீளுகிறது,'' என்றார்.

மாநகராட்சி துணை கமிஷனர் காந்திமதி கூறுகையில்,''பதவி உயர்வுக்கு தகுதியுள்ளோர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ''ஒரு வாரத்தில், தலைமையாசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்,'' என்றார்.