Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, November 19, 2018

வங்க கடலில் குறைந்த காற்றழுத் தாழ்வுப்பகுதி கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு


வங்கக்கடலில் உருவான ‘கஜா’ புயல் தஞ்சை, திருச்சி, நாகை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை புரட்டிப்போட்டது. புயல்-மழையால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்து இன்னும் மக்கள் முழுமையாக மீண்டு இயல்பு நிலைக்கு திரும்பவில்லை.



இந்தநிலையில் வங்ககடலில் புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கன மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தென் கிழக்கு வங்ககடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி மேற்கு திசை நோக்கி நகர்ந்து 20-ம் தேதி (நாளை) தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர பகுதிகளை ஒட்டி நிலைகொள்ளும்.



இதன் காரணமாக 19-ம் தேதி (இன்று) கடலோர மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கும். வட கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியிலும் இன்று கன மழை அல்லது மிக கன மழை பெய்யக்கூடும். தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும். அப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
20-ம் தேதி மற்றும் 21-ம் தேதிகளில் படிப்படியாக உள் மாவட்டங்களில் மழை பெய்யும். தமிழகத்தின் உள் மாவட்டங்களை பொறுத்தமட்டில் ஒரு சில இடங்களில் கன மழை அல்லது மிக கன மழை பெய்யலாம். தென் தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் கன மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



மீனவர்கள் 19-ந் தேதி தென் மேற்கு வங்க கடல் பகுதிகளுக்கும், 20-ம் தேதி தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளுக்கும் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் லேசான மழை பெய்யக் கூடும். 19-ந்தேதி மற்றும் 20-ந்தேதிகளில் அவ்வப்போது மிதமான மழை பெய்யும்.

தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போதைய நிலவரப்படி புயலாக உருவெடுக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.



நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர நிலவரப்படி தமிழகத்தில் அதிகபட்சமாக பூந்தமல்லியில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதற்கு அடுத்தபடியாக கோலப்பாக்கம், திருத்தணியில் தலா 2 செ.மீ. மழையும், சேலம், மாமல்லபுரம், செம்பரம்பாக்கம், செங்கத்தில் தலா 1 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது.

No comments:

Post a Comment