Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, November 28, 2018

சிறப்பாசிரியர்கள் நேரில் அழைத்து திடீர் ஆய்வு


தமிழகத்தில் 2012ம் ஆண்டு கல்வித்துறையில் பணியில் சேர்ந்த சிறப்பாசிரியர்களின் சான்றிதழ்களில் போலி உள்ளதா என்பது குறித்து அவர்களை நேரடியாக அழைத்து திடீர் ஆய்வு செய்தனர்.



தமிழகம் முழுவதும் 2012ம் ஆண்டு பள்ளி கல்வித்துறை மூலம் தையல், உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை ஆகிய ஆசிரியர் பணிக்காக ஏராளமான சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த சிறப்பாசிரியர்களில் கல்வி உள்ளிட்ட அனைத்து தகுதிகளும் சரியாக உள்ளதா என்பது குறித்த சந்தேகங்களை எழுப்பி கல்வித்துறைக்கு புகார்கள் வந்தன.

இந்த நிலையில் இந்த சிறப்பாசிரியர்களின் கல்வி தகுதி உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களையும் சரிபார்க்க கல்வித்துறை உத்தரவிட்டது. இதன் அடிப்படையில் மாவட்ட வாரியாக சிறப்பாசிரியர் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. நெல்லை மாவட்டத்தில் 339 சிறப்பாசிரியர்களின் சான்றுகள் நேற்று, நேற்று முன்தினமும் என 2 நாட்கள் பாளை சாராள்தக்கர் பள்ளியில் வைத்து சரிபார்க்கும் பணி நடந்தது.




முதன்மைக்கல்வி அலுவலர் பாலா, எஸ்எஸ்ஏ ஏபிஓ சேது சொக்கலிங்கம், கல்வி மாவட்ட அலுவலர்கள் நெல்லை ரேணுகா, தென்காசி ஷாஜகான் கபீர், சேரன்மகாதேவி ஜெயராஜ், சங்கரன்கோவில் சந்திரசேகர், வள்ளியூர் சின்னத்துரை மற்றும் கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள் 10 தனித்தனி அறைகளில் ஆய்வு செய்தனர். முதல் நாள் நடந்த ஆய்வில் பங்கேற்றவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு போலி சான்றிதழ்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என அலுவலர்கள் தெரிவித்தனர்.



தொடர்ந்து 2வது நாளாக சான்றிதழ் சரிபார்ப்பு முகாம் நடந்து முடிந்தது. இந்த ஆய்வின் முடிவுகள் கல்வித்துறை தலைமைக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். இது போல் அனைத்து மாவட்டங்களிலும் வெவ்வேறு நாட்களில் இந்த ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. பணியில் சேர்ந்து சுமார் 6 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசிரியர்களின் கல்வி உள்ளிட்ட அனைத்து தகுதி சான்றிதழ்களையும் ஆய்வு செய்தது அவர்களது மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது



No comments:

Post a Comment