Breaking

Saturday, January 12, 2019

அரசு பள்ளிகளில் நீதி போதனை வகுப்புகள்: அமைச்சர் தகவல்


''அரசு பள்ளிகளில், நீதி போதனை வகுப்புகள் கொண்டு வரப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசினார்.





ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், நேற்று, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவியர், 494 பேருக்கு, இலவச சைக்கிள்களை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வழங்கி, பேசியதாவது:
கல்வித்துறைக்கு, தனியாக சேனல் உருவாக்கப்படும். மாணவர்கள், பெற்றோரை நேசிக்கவும், ஆசிரியரை குருவாக நேசிக்கவும், தேச பக்தி உள்ளவர்களாக உருவாக்க, இந்த சேனல் பயன்படும். பெரியவர்களையும், பெற்றோரையும்  நேசிப்பது, இன்று குறைந்து வருகிறது.





தனிக்குடும்ப சிந்தனை,அனைவருக்கும் இருக்கிறது. பெற்றோர், தங்கள்முதுமையில், பேரக் குழந்தைகளை காண தவிக்கின்றனர்.பாசத்தோடு வாழ்க்கையில் நாம் நடை போட வேண்டும். இதற்காக, ஒரு காலத்தில் இருந்த, நீதிபோதனை என்ற வகுப்பு, மீண்டும் கொண்டு வரப்படும்.
இதற்கான, புத்தகங்கள் வடிவமைக்கப்படுகிறது. உடற்பயிற்சி மற்றும் யோகா பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
தேர்தலுக்கு முன்பே தேர்வு அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களிடம் கூறியதாவது:





லோக்சபா தேர்தலுக்கு முன்பே, ஒன்று முதல், பிளஸ் 2 வகுப்புகளுக்கு, முழு ஆண்டு மற்றும் பொதுத்தேர்வு நடத்த, தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறித்த நாளில், திட்டமிட்டபடி தேர்வுகள் நடக்கும். அரசு பள்ளி மாணவர்களுக்கு, உயர்கல்வி வழிகாட்டல் குறித்த விபரங்கள், பாடத்திட்டத்திலேயே இணைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் கூறினார்.