Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, January 14, 2019

போகி பண்டிகை ஏன் கொண்டாடுகிறோம் தெரியுமா? !






போகி தமிழ் ஆண்டின் மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று, அதாவது பொங்கல் திருநாளின் முதல்நாள் கொண்டாடப்படுகிறது.
இந்தநாள் 'பழையன கழித்து, புதியன புகவிடும்' நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.அக்கால வழக்கப்படி ஆண்டின் கடைசிநாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகையாகும்.



வீட்டில் உள்ள பழைய மற்றும் தேவையில்லாத பொருட்களை புறக்கணித்து வீட்டில் புதியன வந்து புகுதல் வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள். அன்றைய நாள், வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.

இவற்றோடு பழைய பழக்கங்கள், ஒழுக்கக் கேடுகள், உறவுகளிடம் ஏற்பட்ட மனக்கசப்புகள் போன்ற வேண்டத்தகாத எண்ணங்களையும் "ருத்ர கீதை ஞான யக்ஞம்" என அழைக்கப்படும் அக்னி குண்டத்தில் எறிந்து பொசுக்கி வீட்டை மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களையும், தவறான எண்ணங்களையும் நீக்க வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.



பல்வேறு தெய்வீக குணங்களை தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலிக்கிறது. பெரும் பொங்கல், மகர சங்கராந்தி மற்றும் லோரி எனப்படும் பண்டிகைக்கு முந்தைய நாளில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

போகி அன்று விடியற்காலை பழையப்பொருட்களை எல்லாம் ஓர் இடத்தில் குவித்து எரிப்பது வழக்கம். கொட்டு எனப்படும் போகி மோளத்தை கொட்டுவிப்பார்கள்.

இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்