Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, January 12, 2019

இந்தியாவில் தொடரும் வேலையின்மை!


பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பிறகு இந்தியாவில் வேலையின்மை விகிதம் நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது.



மத்திய தொழிலாளர் பணியத்தின் வருடாந்திர வேலைவாய்ப்பு - வேலையின்மை ஆய்வின்படி, இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 2013-14ஆம் ஆண்டில் 3.4 சதவிகிதமாகவும், 2015-16ஆம் ஆண்டில் 3.7 சதவிகிதமாகவும், 2016-17ஆம் ஆண்டில் 3.9 சதவிகிதமாகவும் இருந்துள்ளது. 2016-17 நிதியாண்டின் நவம்பர் மாதத்தில்தான் பணமதிப்பழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆண்டில் இந்தியாவின் வேலைவாய்ப்பின்மை விகிதம் முந்தைய நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்திருப்பதாக தொழிலாளர் பணியகத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.



தொழிலாளர் சக்தி பங்கேற்பு விகிதத்தைப் பொறுத்தவரையில், 2015-16ஆம் ஆண்டில் 75.5 சதவிகிதத்திலிருந்து 2016-17ஆம் ஆண்டில் 76.8 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. தொழிலாளர் பணியத்தின் இந்த அறிக்கை இன்னும் வெளியாகாத நிலையில் அரசு தரப்பு அதிகாரிகளிடமிருந்து இந்த விவரங்கள் தெரியவந்துள்ளதாக பிசினஸ் ஸ்டேண்டர்டு செய்தி நிறுவனம் இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.


இந்த அறிக்கையை வெளியிட மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சரான சந்தோஷ் குமார் கங்வார், சென்ற டிசம்பர் மாதத்திலேயே ஒப்புதல் வழங்கிவிட்டதாகவும், சில காரணங்களுக்காக இந்த அறிக்கையை அரசு வெளியிடாமல் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.