Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 11, 2019

அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு கைபேசி வழங்கும் திட்டம் அறிமுகம்

தேசிய ஊட்டச்சத்து குழுமம் மூலம் ஒவ்வொரு அங்கன்வாடியிலும் பணியாளர்களுக்கு நவீன கைபேசி வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளதாக ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். மாநில அளவில் அங்கன்வாடிகள் மூலம் குழந்தைகள், கர்ப்பிணிகள், வளர் இளம்பெண்கள், முதியோர் ஆகியோருக்கான பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.


இந்நிலையில், கிராமங்களில் ஊட்டச்சத்து குறைபாடு, குறைந்த எடையுடன் குழந்தை பிறத்தல், சரியான வளர்ச்சி இன்மை, வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோர் ரத்த சோகையால் பாதிக்கப்படும் சூழல் ஆகியவை காணப்படுகின்றன . அங்கன்வாடி அளவிலேயே ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத இந்தியாவை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு, மத்திய அரசு தேசிய ஊட்டச் சத்து குழுமத்தை இயக்கி வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் கர்ப்பிணிகள் உள்ளிட்டோர் தொடர்பாக முழு விவரங்களை அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் உடனுக்குடன் பெற முடியும்.
தற்போது, இந்த விவரங்களை விரைவாக அனுப்பி பதிவு செய்யும் வகையில், அங்கன்வாடி மேற்பார்வையாளர்கள், அங்கன்வாடி அமைப்பாளர்கள் ஆகியோருக்கு இணையதளத்துடன் தனி மென்பொருள் வசதியுடன் கூடிய நவீன கைபேசிகள் வழங்கும் திட்டத்தை தேசிய ஊட்டச்சத்து குழுமம் அறிமுகம் செய்துள்ளது. முதல் கட்டமாக ஊட்டசத்துக் குறைபாடு உள்ளவர்கள் இருக்கும் மாவட்டங்களைத் தேர்வு செய்து, தேசிய ஊட்டச்சத்து திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் சென்னை, அரியலூர், நீலகிரி, திண்டுக்கல், விழுப்புரம், திருநெல்வேலி, திருவள்ளூர், திருச்சி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய 11 மாவட்டங்களில் முதல் கட்டமாக இத்திட்டம் அமலாகி வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் இது செயல்படுத்தப்பட உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து திருவள்ளூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக அதிகாரி ஒருவர் கூறியது: பிறந்த குழந்தை முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அங்கன்வாடி மையங்கள் மூலமாக மேம்படுத்துவதற்கு அரசு தனிக் கவனம் செலுத்தி வருகிறது. இதற்காக கிராம அளவில் குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் பிறப்பு ஆகியவை பதிவு செய்யப்பட்டு வந்தன. இனி, நாள்தோறும் இதுபோன்ற விவரங்களை பதிவு செய்வதற்கு நவீன கைபேசிகள் வழங்கப்படும். இதற்காக இணையதள வசதி மற்றும் தனி மென்பொருள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 1,760 அங்கன்வாடி மையங்களில் பணியாற்றி வரும் மேற்பார்வையாளர்கள், அமைப்பாளர்கள் ஆகியோருக்கு நவீன கைபேசி மற்றும் சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. ஊட்டச்சத்து பற்றாக்குறை, குள்ளத்தன்மை, வயதுக்கேற்ற உயரமின்மை, உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமை போன்றவற்றை உடனே கண்காணித்து தேவையான அறிவுரைகளும், உரிய வழிகாட்டுதல்களும் வழங்கப்படும். தற்போது நவீன கைபேசியைப் பயன்படுத்துவது, செயலி (ஆப்) மூலம் தனி மென்பொருளைப் பதிவிறக்கம் செய்வது ஆகியவை தொடர்பாக பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து இத்திட்டம் அமலுக்கு வரவுள்ளது. இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் காகிதப் பதிவேடுகளே தேவைப்படாது என்றார் அவர்.