Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, April 28, 2019

எஸ்எம்எஸ் மூலமும் தெரிந்து கொள்ளலாம் 29ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவு



தமிழகம், புதுச்சேரி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை 29ம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வுத்துறை வெளியிடுகிறது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த மாதம் 14ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடந்தது. தமிழகம், புதுச்சேரியை சேர்ந்த 12 ஆயிரத்து 546 பள்ளிகளில் பயின்ற 9 லட்சத்து 97 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் காலையில் தொடங்குவதற்கு பதிலாக இந்த ஆண்டு மதியத்தில் நடந்தன.


தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் மாத இறுதியில் தொடங்கி ஏப்ரல் 15ம் தேதி வரை நடந்தது. இதையடுத்து, இம்மாதம் 29ம் தேதி காலை 9.30 மணி அளவில் தேர்வு முடிவுகளை தேர்வுத்துறை வெளியிடுகிறது. அதே நேரத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் இணைய தளம் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்.
பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலம் மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் தெரிந்து கொள்ள முடியும். மேலும், தேர்வு முடிவுகள் வெளியான அடுத்த 2 நிமிடத்தில் மாணவர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.

இதுதவிர, www.tnresults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ஆகிய இணைய தளங்களிலும் மாணவர்கள் தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம். மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.


பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளவதைப் போல, தனித் தேர்வர்களுக்கு அவர்களின் செல்போனுக்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து, மே 2ம் தேதி பிற்பகலில் மாணவர்கள் தங்கள் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையங்களின் மூலமாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம். 6ம் தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் இருந்தும் மாணவர்கள் தாங்களாகவே மதிப்பெண் சான்றுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



மறுகூட்டல்

மார்ச் மாதம் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் மதிப்பெண் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் மே 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை பள்ளிகள் மூலமாகவும், தனித் தேர்வர்கள் தேர்வு மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்க வேண்டும். மொழிப்பாடம் 1 ரூ.305, மொழிப்பாடம் (ஆங்கிலம்) ரூ.305, கணக்கு அறிவியல், மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு ரூ.205, விருப்ப மொழிப்பாடத்துக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும்.பத்தாம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடக்கிறது. இதற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.