Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 11, 2019

கருந்துளையை முதல் முறையாக படமெடுத்து விஞ்ஞானிகள் சாதனை



அண்ட வெளியின் அதிசயமாகக் கருதப்படும் கருந்துளையை (BLACK HOLE) முதல் முறையாகப் படமெடுத்து, விண்வெளி விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.
அண்டவெளியில், மிகவும் சக்தி வாய்ந்த ஈர்ப்பு விசையைக் கொண்ட பகுதிகளை 18-ஆம் நூற்றாண்டே கண்டுபிடித்த விஞ்ஞானிகள், அவற்றை கருப்பு நட்சத்திரம் என்று அழைத்து வந்தனர்.


அந்த கோளவடிமான ஈர்ப்பு எல்லைக்குள் செல்லும் விண்துகள்கள், ஒளி போன்ற மின்காந்த கதிர்வீச்சுகள் கூட, ஊடுருவி வெளியேற முடியாத அளவுக்கு அவற்றின் ஈர்ப்பு சக்தி மிக வீரியமாக இருந்ததால், அவற்றின் உருவம் எத்தகைய தொலைநோக்கிகள் மூலமும் பார்க்க முடியாது; எல்லைக்குள் என்ன நடக்கிறது என்பதை எந்த வித கருவியைக் கொண்டும் அறிந்து கொள்ள முடியாது.
எனினும், அவற்றின் ஈர்ப்பு சக்தி காரணமாக எல்லைக்கு அப்பால் நிகழும் நிகழ்வுகளைக் கொண்டு, அவற்றின் இருப்பிடம் குறித்து அறிந்து கொள்ள முடியும். உதாரணத்துக்கு, குறிப்பிட்ட பகுதியை விண்மீன்கள் சுற்றி வந்தால், அந்தப் பகுதியில் அதீத சக்தி வாய்ந்த ஈர்ப்புவிசைப் பகுதி இருப்பதைக் கண்டறியலாம்.


எனினும், அவற்றைப் பார்க்க முடியாது என்பதால் அதற்கு கருந்துளை என்று விஞ்ஞானிகள் பெயரிட்டு அழைத்தனர்.
இதுவரை கருந்துளை குறித்த கற்பனைப் படங்களே வரையப்பட்டு வந்த நிலையில், பெரும் முயற்சிக்குப் பிறகு அண்டவெளியில் உள்ள மேசியர்-87 என்ற பால்வெளி மண்டலத்தில் உள்ள எம்87 என்றழைக்கப்படும் கருந்துளையை விஞ்ஞானிகள் முதல்முறையாக படம் பிடித்துள்ளனர்.
பூமியிலிருந்து 5 கோடி ஒளிவருட தொலைவில் உள்ள அந்தக் கருந்துளையைப் படம் பிடிக்கும் அளவுக்கு மிகப் பெரிய தொலைநோக்கியை உருவாக்க முடியாது

என்பதால், அமெரிக்காவின் ஹவாய், அரிúஸானா பகுதிகளிலும், ஸ்பெயின், மெக்ஸிகோ, சிலி உள்ளிட்ட நாடுகளிலும் உள்ள தொலைநோக்கிகளின் மூலம் பல நாள்களாக கவனித்து எடுக்கப்பட்ட படங்களை ஒருங்கிணைந்து, எம்87 கருந்துளையின் படம் உருவாக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.


அதையடுத்து, இதுவரை கற்பனையில் மட்டுமே வரையப்பட்டு வந்த கருந்துளை, உண்மையில் எப்படி இருக்கும் என்பதை முதல் முறையாகப் பார்க்க முடிந்துள்ளது.
விண்வெளி ஆய்வில் இந்த சாதனை ஒரு மைல்கல்லாகக் கருதப்படுகிறது என விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.