Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, April 30, 2019

முதுநிலை படிப்புகளுக்கு தனி நுழைவுத் தேர்வு: அண்ணா பல்கலை. முடிவு



அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் எம்பிஏ, எம்சிஏ, எம்.இ. உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கு தனி நுழைவுத் தேர்வை நடத்த அந்தப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. நிகழாண்டு முதல் அந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்பிஏ, எம்சிஏ, எம்.டெக், எம்.இ., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற முதுநிலை படிப்புகளில் சேர இதுவரை டான்செட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அளவில் கலந்தாய்வு நடைபெறும்.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும், இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது.வழக்கம்போலவே நிகழாண்டும், டான்செட் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகக் கூடும் என எதிர்பார்த்து வந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் கொள்கை முடிவு ஒன்றை எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் முதுநிலைப் படிப்புகள் அனைத்துக்கும் டான்செட் தேர்வுக்கு பதிலாக தனி நுழைவுத் தேர்வு நடத்துவது என திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளையில், மற்ற பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு எத்தகைய நடைமுறை பின்பற்றப்படும் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.


இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழகம் தனி அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சில முக்கிய முடிவுகளை எங்களால் எடுக்க இயலும். பல்கலைக்கழக முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மே மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்பது பெரும்பாலான பேராசிரியர்களின் கருத்து. அப்போதுதான் தகுதியான மாணவர்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்க்க முடியும். இல்லையெனில், அவர்கள் வேறு கல்வி நிறுவனங்களைத் தெரிவு செய்ய வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில்கொண்டே தனி நுழைவுத் தேர்வு முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.