Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, May 15, 2019

அரசுப் பள்ளிகளில் முழுமையான மாணவர் சேர்க்கை : முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்படுவது குறித்து பெற்றோர், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, வரும் கல்வியாண்டில் முழுமையான சேர்க்கை நடைபெற நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக, தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்: அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அரசுப் பள்ளியில் தீவிர மாணவர் சேர்க்கைக்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுரை வழங்கி முழுமையான சேர்க்கை பெறச் செய்தல் வேண்டும். கோடை விடுமுறையிலேயே பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.

அரசு நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளுமாறு அந்தப் பள்ளிகளில் தலைமையாசிரியர்களுக்கு வட்டாரக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த எடுக்க வேண்டும்.
தரமான கல்விக்கு உத்தரவாதம்: மாணவர்களுக்கு காற்றோட்டமான சூழலில் வகுப்பறைகள், மதிய உணவுத் திட்டம், பாதுகாப்பான குடிநீர், கழிப்பிட வசதி மற்றும் நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் அரசுப் பள்ளிகளில் உள்ளதை பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி தங்களது குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்த்துப் பயன்பெற கேட்டுக் கொள்ள வேண்டும்.

மேலும், அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட்டு வருவதை பொதுமக்கள் அறியும் வகையில் பள்ளி ஆசிரியர்கள், கிராமக் கல்வி உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மூலமாக விழிப்புணர்வு பேரணிகள் நடத்தி மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், மாணவர் சேர்க்கை தொடர்பான விழிப்புணர்வு பேரணிகளில் பள்ளி மாணவர்களை ஈடுபடுத்தக்கூடாது என அதில் குறிப்பிட்டுள்ளார்.