Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, June 14, 2019

ரூ.10 கோடி செலவில் 27 பள்ளிகளில் ஏசியுடன் ஸ்மார்ட் வகுப்பறை


ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள 27 பள்ளிகளில் ஏசி வசதியுடன் கூடிய ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்காக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ஈரோடு மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மாநகராட்சி பகுதிகளில் பல்வேறு திட்டப்பணிகள் மேற்கொள்ள மத்திய அரசு ரூ.990 கோடி நிதி ஒதுக்க உள்ளது. முதல்கட்டமாக 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள், மைக்ரோ கம்போஸ்டிங் சென்டர் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது மாநகராட்சி பகுதிகளில் உள்ள 27 பள்ளிகளில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளது.
இந்த வகுப்பறைகள் மாணவர்களின் வசதிக்காக தரையில் டைல்ஸ் பொருத்தப்பட்டு வகுப்பறையில் ஏசி வசதியுடன் கண்காணிப்பு கேமராவும் அமைக்கப்படுகிறது. மேலும், பாடங்களை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் கம்ப்யூட்டர், டிஜிட்டல் போர்டு போன்றவையும் அமைக்கப்படுகிறது.
இதற்காக, மாநகராட்சி சார்பில் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அங்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை தயார் செய்யப்பட்டு வருகிறது. இப் பணிகள் இன்னும் சில மாதங்களில் முடிக்கப்பட்டு மாணவ, மாணவியர்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சி நிர்வாகத்தின்கீழ் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகள் என 61 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் மாநகராட்சி சார்பில் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது.
தற்போது மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ஈரோடு மாநகராட்சி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளாக மாற்றப்பட்டு வருகிறது.
இதில், தொடக்கப்பள்ளிகளில் ஒரு வகுப்பறையும், நடுநிலைப்பள்ளிகளில் 2 வகுப்பறைகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 3 வகுப்பறைகளும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகளாக மாற்றும் பணி நடந்து வருகிறது.
ஒவ்வொரு வகுப்பறையிலும் தரையில் டைல்ஸ் பதிக்கப்பட்டும் சீலிங், சுவர்களில் வர்ணம் பூசப்படுகிறது. ஏசி வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.


இந்த வகுப்பறைகளில் உள்ள போர்டுகள் டிஜிட்டல் போர்டுகளாக பயன்படுத்தப்பட உள்ளது.
வகுப்பறையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது அதை கண்காணிக்கும் வகையில் கேமரா பொருத்தப்படுகிறது.
மாணவ, மாணவியர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் வகையில் கம்ப்யூட்டர் திரை மூலமாக படக்காட்சிகளுடன் பாடம் நடத்தப்படுகிறது.
தற்போது மாநகராட்சி பகுதிகளில் 27 பள்ளிகளில் இந்த ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் கொண்டு வரப்படுகிறது. அதன்பின், 200 மாணவ, மாணவியர்களுக்கு மேல் உள்ள பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு அந்த பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.