Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, June 17, 2019

மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் படிக்கலாம்!


பொறியியல் படிப்பில் சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன், எலெக்ட்ரிக்கல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி உள்ளிட்ட பல்வேறு பாடப்பிரிவுகள் உள்ளன. இவற்றோடு பயோ மெடிக்கல் டெக்னாலஜி, டெக்ஸ்டைல் டெக்னாலஜி, செராமிக் டெக்னாலஜி, பயோ-மெடிக்கல் இன்ஜினியரிங், ரப்பர் மற்றும் பிளாஸ்டிக் டெக்னாலஜி, இண்டஸ்ட்ரியல் டெக்னாலஜி, பார்மாசூட்டிக்கல் டெக்னாலஜி, ஃபுட் டெக்னாலஜி என ஏராளமான சிறப்பு பிரிவுகளும் இருக்கின்றன. அவற்றுள் ஒன்று மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்.


இது, பொறியியலும் மருத்துவமும் இணைந்த துறை ஆகும். மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் என்பது மருத்துவ உபகரணங்கள், இயந்திரங்கள், கருவிகள், ஆய்வு மேம்பாடு தொடர்புடைய படிப்பு. மாறிவரும் மருத்துவ சிகிச்சையில் அதி நவீன மருத்துவ சாதனங்களும், தொழில்நுட்ப கருவிகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்கள் மருத்துவ உபகரணங்களையும் அவற்றுக்கான புதிய தொழில்நுட்பங்களையும் உருவாக்குகிறார்கள். சிறப்பு மருத்துமனைகளில் அறுவை சிகிச்சையின்போது மருத்துவர்களின் வலதுகரமாக திகழ்பவர்கள் மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பட்டதாரிகள்தான்.


எம்பிபிஎஸ் படித்தவர்கள் சிகிச்சையின் டாக்டர்கள் என்றால் மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்கள் மருத்துவ சாதனங்களின் டாக்டர்களாக செயல்படுபவர்கள். வெளிநாடுகளில் இருந்து மருத்துவ சாதனங்கள் இறக்குமதி செய்யும் நிலை மாறி தற்போது மேக் இன் இந்தியா திட்டத்தில் உள்நாட்டில் பெருமளவு மருத்துவ கருவிகள் தயாராகின்றன. இந்தியாவில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் சென்னை நகரம் மருத்துவ தலைநகரமாக உருவாகி வருகிறது. இங்கு சர்வதேச தரத்தில் அதிநவீன சாதனங்களுடன் கூடிய சிறப்பு மருத்துவமனைகள், பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைகள் ஏராளமான உள்ளன.

புதிய மருத்துவமனைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. இத்தகைய சூழலில் தற்போது மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பு தற்போது மிகவும் பிரபலமாகி வருகிறது. மருத்துவ உலகில் ஏற்பட்டு வரும் மாற்றங்களும், தொழில்புரட்சியும் இத்துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி வருகின்றன. பிஇ மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் இதர பொறியியல் படிப்பை போன்று 4 ஆண்டு கால பட்டப் படிப்பு ஆகும். பொறியியல் கல்லூரிகளிலும், ஐஐடி உள்ளிட்ட உயர் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களிலும் இப்படிப்பு வழங்கப்படுகிறது. பிளஸ் 2 வில் கணிதம், உயிரியல், வேதியியல் படித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம். பொறியியல் கல்லூரிகளில் கலந்தாய்வு முறையில் இதற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.


ஐஐடி.யில் சேர வேண்டுமானால் ஜெஇஇ அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பட்டதாரிகளுக்கு உள்நாடுகளிலும் வெளி நாடுகளிலும் நல்ல சம்பளத்தில் வேலைகள் கிடைக்கின்றன. சிறப்பு மருத்துவமனைகள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற் சாலைகளில் அவர்கள் பணியாற்றலாம். மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பட்டதாரிகள் கிளினிக்கல் இன்ஜினியர், பயோமெட்டீரியல் இன்ஜினியர், பேட்டன்ட் அனலிஸ்ட், பிசினஸ் மேனேஜர்ஸ், ஆராய்ச்சி விஞ்ஞானிகள், டெக்னிக்கல் ரைட்டர்ஸ், பயோமெக்கானிக்ஸ் இன்ஜினியர், பயோ இன்ஸ்ட்ருமென்டேஷன் இன்ஜினியர் போன்ற பணிகளில் சேரலாம்.

பி.இ. மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் வழங்கப்படும் முக்கிய பொறியியல் கல்லூரிகள்:
1. சவீதா பொறியியல் கல்லூரி, தண்டலம், சென்னை
2. வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, திண்டல், ஈரோடு
3. ஜேப்பியார் தொழில்நுட்பக் கல்லூரி, குன்னம், ஸ்ரீபெரும்புதூர்
4. செங்குந்தர் பொறியியல் கல்லூரி, திருச்செங்கோடு, நாமக்கல் வேலைவாய்ப்புகள் பிரகாசம் மருத்துவமும் பொறியியலும் கலந்த துறைகளாக இருப்பவை இரு பொறியியல் துறைகள். ஒன்று பயோ மெடிக்கல் இன்ஜினியரிங்.


இது மருத்துவமனை தொடர்புடையது. இன்னொன்று மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங். இது முற்றிலும் மருத்துவ உபகரணங்கள் சம்பந்தப்பட்டது ஆகும். மெடிக்கல் எலெக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் படிப்பானது தற்போது மாணவர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி வருகிறது. இந்தியாவில் குறைவான கட்டணத்தில் சர்வதேச தரத்தில் மருத்துவ சிகிச்சை கிடைப்பதாலும், கார்ப்பரேட் மருத்துவமனைகள் பெருகி வருவதாலும் வெளிநாட்டினர் இங்கு அதிகம் வருகிறார்கள். இதனால், மருத்துவ சுற்றுலாவின் கேந்திரமாக இந்தியா திகழ்கிறது.


நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் வருவதால் மருத்துவ உபகரணங்கள் இல்லாமல் மருத்துவர்களால் ஒன்றும் செய்ய இயலாது. நோயாளிகளை பரிசோதனை செய்வதற்கும், அவர்களுக்கு விரைந்து சிகிச்சை அளிப்பதற்கும் மருத்துவ உபகரணங்கள் முக்கியமானவை. சி.டி. ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ சாதனங்கள் நோய்களை கண்டறியவதற்கு மருத்துவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்றன.
புற்றுநோய் சிகிச்சையில் மருத்துவ சாதனங்களின் பங்கு மிகவும் அதிகம். தற்போது கண் பார்வை சிகிச்சையை அதிநவீன தொழில்நுட்பத்தாலும் நவீன கருவிகளாலும் சில நிமிடங்களிலே மேற்கொண்டுவிட முடிகிறது. மிக வேகமாக மாறிவரும் மருத்துவத்துறையில் மெடிக்கல் எலெட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் பட்டதாரிகளின் பங்களிப்பு அதிகமாகி வருகிறது