Join THAMIZHKADAL WhatsApp Groups
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளிகளிலேயே இணையதளம் மூலம் புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட வேலைவாய்ப்புப் பதிவு.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள், வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்காக அவரவர் படித்த பள்ளியிலேயே மதிப்பெண் சான்றிதழை பதிவு செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் ஜோதி நிர்மலாசாமி வெளியிட்ட அறிக்கை:
2019ஆம் ஆண்டுக்கான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ் புதன்கிழமை (ஜூலை10) முதல் வழங்கப்பட்டு வருகிறது. எனவே, அன்றைய தினம் முதல் வரும் 24ஆம் தேதி வரை 15 நாள்களுக்கு ஒரே பதிவு மூப்பு தேதி வழங்கி அவர்கள் பயின்ற பள்ளியிலேயே இணையதளம் வாயிலாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுப் பணிக்கான சிறப்பு நடவடிக்கைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, பள்ளி கல்வித்துறையுடன் இணைந்து மேற்கொண்டு வருகிறது.
தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளிலும் இந்த வசதியைப் பயன்படுத்தி மாணவர்கள் வேலைவாய்ப்பு பதிவுகள் மேற்கொள்ளலாம்.
மேலும், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பயின்ற மாணவர்கள் தங்கள் கல்வித்தகுதியை வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில்
www.tnvelaivaaippu.gov.in பதிவு செய்யலாம் அல்லது அவர்கள் தங்களது மாவட்டத்துக்குரிய வேலைவாய்ப்பு அலுவலகத்தையும் அணுகி பதிவு செய்யலாம். ஆதார் அட்டை, குடும்ப அட்டை, சாதி சான்றிதழ் மற்றும் பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் ஆகிய விவரங்களுடன் சம்பந்தப்பட்ட பள்ளிகளை அணுகி மாணவ, மாணவிகள் வேலைவாய்ப்பகப் பதிவுகளை மேற்கொள்ளலாம் என கூறியுள்ளார்.