Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 31, 2019

EMIS -தனியார் பள்ளி மாணவர்கள் விபரம் சரியாக இருக்கவேண்டும் -CEO புதுக்கோட்டை


வருகைப் பதிவேட்டில் உள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கையும், பெயர் பட்டியலும், கல்வித் தகவல் மேலாண்மை முறைமையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் பெயர் பட்டியலும் சரியாக இருக்க வேண்டும். சுயநிதி, மெட்ரிக் பள்ளி முதல்வர் களுக்கான கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி அறிவுறுத்தல்.



புதுக்கோட்டை, ஜுலை.31: புதுக்கோட்டை அருள்மிகு பிரகதம்பாள் அரசினர் மேல் நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள தேர்வுக் கூட அரங்கில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து சுய நிதி மற்றும் முதல்வர் களுக்கான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி தலைமை தாங்கி பேசும் போது கூறியதாவது, ஒவ்வொரு சுயநிதி, மெட்ரிக் பள்ளியும் தகுதியுள்ள ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆசிரியர்களுக்கு வாரந்தோறும் கூட்டம் நடத்தி உளவியல் ரீதியான ஆலோசனைகளை வழங்க வேண்டும். புகாருக்கு உள்ளாகும் ஆசிரியர்களை உடனடியாக பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். மாணவ, மாணவிகள் கழிப்பறைக்கு செல்லும் வழியில் புதர்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவ, மாணவிகள் பள்ளிக்கு பேருந்தில் வரும் போதும் செல்லும் போதும் இரண்டு உதவியாளர்களை நியமித்து பாதுகாப்பாக அனுப்பி வைக்க வேண்டும். மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளிகளில் வெப் கேமரா பொருத்த வேண்டும்.சில சுயநிதி, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வுக் கூட செய்முறை பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் கருத்தியல் பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக தெரியவருகிறது. எனவே இனி வரும் காலங்களில் ஆய்வுக் கூட செய்முறைப் பயிற்சியினை முறையாக அளிக்க வேண்டும். நூலகப் புத்தகம் பயன்பாட்டில் இருக்க வேண்டும். தொடர் அங்கீகாரம் மற்றும் புதுப்பித்தலுக்காக இணைய தளத்தில் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். வகுப்பு வாரியாக கட்டண விபரங்களை வெளியில் தெரியுமாறு ஒட்டி வைக்க வேண்டும்.

நமது மாவட்டத்தில் கல்வித் தகவல் மேலாண்மை முறைமையில் (emis) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் பெயர் பட்டியலை ஆய்வு செய்ய இணை இயக்குநர் அவர்கள் வருகை தர உள்ளார்கள். அப்போது உங்களது பள்ளிக்கும் ஆய்வுக்கு வரலாம். எனவே உங்களது பள்ளியில் வருகைப் பதிவேட்டில் உள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் பெயர் பட்டியலும் , கல்வித் தகவல் மேலாண்மை முறைமை (emis)யில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை மற்றும் பெயர் பட்டியலும் சரியாக இருக்க வேண்டும். பள்ளிக் கல்வித்துறை அறிவிக்கும் நாட்களைத் தவிர மற்ற நாட்களில் வகுப்புகள் நடத்தக் கூடாது.

எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் பள்ளியினை நடத்தக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். இக் கூட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர்கள், தேர்வுத் திட்ட அமைப்பாளர்கள், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாவட்ட உதவித்திட்ட ஒருங்கிணைப்பாளர், உதவித் திட்ட அலுவலர், பள்ளித் துணை ஆய்வாளர்கள், எமிஸ் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், சுயநிதி, மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.