Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 2, 2019

ஆக. 13, 14-இல் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள்: பள்ளி, கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்


தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் ஆகஸ்ட் 13, 14-ஆம் தேதிகளில் நடத்தப்பட உள்ளன.
இதில், வேலூர் மாவட்டத்தில் பயிலும் மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வேலூர் மாவட்ட அளவில் பிளஸ் 1, பிளஸ் 2 பயிலும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தமிழில் பேச்சாற்றலையும், படைப்பாற்றலையும் வளர்க்கும் நோக்கில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், கவிதை, கட்டுரை, பேச்சுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.


ஆகஸ்ட் 13-ஆம் தேதி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், 14-ஆம் தேதி கலைக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, மருத்துவக் கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி, சட்டக் கல்லூரி உள்ளிட்ட அனைத்துக் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இதில், முதலிடம் பிடிப்பவர்களுக்கு தலா ரூ. 10 ஆயிரமும், இரண்டாம் இடம் பிடிப்போருக்கு தலா ரூ. 7 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடிப்போருக்கு தலா ரூ. 5 ஆயிரம் பரிசுத் தொகைகளுடன் சான்றிதழும் அளிக்கப்பட உள்ளது.
போட்டிகள் வேலூர் அரசு ஈ.வெ.ரா.நாகம்மையார் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலை 9 மணிக்கு தொடங்கும். இப்போட்டிகளில் வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மேல்நிலைப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம்.


ஒரு பள்ளி, கல்லூரியில் இருந்து ஒவ்வொரு போட்டிக்கும் ஒரு மாணவர் வீதம் மூவர் மட்டுமே பங்கேற்கலாம். போட்டியில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள் உரிய படிவத்தில் பள்ளித் தலைமையாசியர், கல்லூரி முதல்வரிடம் ஒப்பம் பெற்று வரவேண்டும்.
மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் மாணவர்கள், சென்னையில் நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க பரிந்துரைக்கப்படுவர். மேலும் விவரங்களுக்கு, வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மாவட்ட தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 0416 - 2256166 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பெறலாம்.