Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, August 23, 2019

அடுத்த ஆண்டு மே 3-இல் நீட் தேர்வு: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு


எம்பிபிஎஸ் படிப்புக்கான தேசிய தகுதி காண் நுழைவுத் தேர்வு (நீட்) அடுத்த ஆண்டு மே 3-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
நிகழாண்டைப் போலவே எதிர்வரும் ஆண்டிலும் நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு
தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. அடுத்த ஆண்டுக்கான நீட்தேர்வினை எழுத விரும்புவர்கள், வரும் டிசம்பர் 2-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
அடுத்த ஆண்டு மார்ச் 27-ஆம் தேதி தேர்வுக் கூட அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்யலாம் என்றும், தேர்வு முடிவுகள் ஜூன் 4-ஆம் தேதி வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


நிகழாண்டில், நாடு முழுவதும் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் நீட் தேர்வினை எழுதியிருந்தனர். தமிழகத்தைப் பொருத்தவரை மொத்தம் 1.23 லட்சம் தேர்வெழுதியிருந்தனர். அவர்களில் 59,785 பேர் தேர்ச்சி பெற்றனர். முன்னதாக, நாடு முழுவதும் மொத்தம் 154 நகரங்களில், 2,546 மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டன. தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்கம், உருது ஆகிய 11 மொழிகளில் அத்தேர்வுகள் நடைபெற்றன.
கடந்த 2016 மற்றும் 2017-இல் நீட் தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்தி வந்த நிலையில், நிகழாண்டு முதல் தேசிய தேர்வுகள் முகமை அதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.