Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 1, 2019

எம்பிபிஎஸ் வகுப்புகள் இன்று தொடக்கம்: மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு


அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாமாண்டு எம்பிபிஎஸ் வகுப்புகள் வியாழக்கிழமை முதல் தொடங்குகின்றன. கல்லூரிகளுக்கு வரும் மாணவ, மாணவிகளுக்கு ஆடை விவகாரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
மாநிலத்தில் 23 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. அதைத் தவிர, பெருந்துறை ஐஆர்டி, சிதம்பரம் ராஜா முத்தையா கல்லூரிகளையும் அரசு ஏற்று நடத்துகிறது.
அங்கு மொத்தம் 3,350 இடங்கள் உள்ளன. அவற்றுக்கான முதல்கட்ட கலந்தாய்வு அண்மையில் நடந்து முடிந்தது. அதில் மீதம் இருந்த இடங்கள், கல்லூரிகளில் மாணவர்கள் சேராததால் ஏற்பட்ட காலி இடங்கள் ஆகியவற்றுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், முதலாம் ஆண்டு வகுப்புகள் வியாழக்கிழமை தொடங்குகின்றன. கல்லூரிகளில் புதிதாக சேர்ந்துள்ள மாணவர்களுக்கு சில அறிவுறுத்தல்களும், ஆடைக் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.


இதுகுறித்து, மருத்துவக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள உத்தரவு:
ஜீன்ஸ் பேன்ட், டி-சர்ட், ஸ்லீவ்-லெஸ் மேலாடைகள், லெகிங்ஸ் உள்ளிட்ட ஆடைகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் அனுமதி இல்லை. மாணவிகள் சேலை, சல்வார் கமீஸ், சுடிதார் போன்ற ஆடைகளை மட்டுமே அணிந்து வரவேண்டும். மாணவர்கள் பேன்ட், சட்டை அணிந்தும், ஷூ அணிந்தும் வர வேண்டும். மாணவ, மாணவிகள் வகுப்பறைக்குள் செல்லிடப்பேசிகளை பயன்படுத்தக் கூடாது. கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க பேராசிரியர்கள் கொண்ட குழுவை அமைக்க வேண்டும். ராகிங்கில் ஈடுபடும் மாணவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய பாடத்திட்டம்: நிகழாண்டு முதல் எம்பிபிஎஸ் பாடத்திட்டங்கள் திருத்தியமைக்கப்பட்டுள்ளன. அதன்படி, புதிய பாடத் திட்டத்தின் கீழ் வகுப்புகள் நடைபெற உள்ளன.


அதில், குறிப்பிடத்தக்க அம்சமாக, முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படிப்பிலேயே 60 மணி நேரம் நோயாளிகளை மாணவர்கள் நேரடியாகச் சந்தித்து சிகிச்சை முறைகளைக் கற்பதற்கான பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு வரை இரண்டாம் ஆண்டில் இருந்துதான் மாணவர்களுக்கும், நோயாளிகளுக்கும் நேரடித் தொடர்பு இருக்கும் வகையில் பாடத் திட்டங்கள் இருந்தன.