Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 22, 2019

தொடக்கக் கல்வித் துறையை நிரந்தரமாக மூடும் அரசாணை: திரும்பப் பெறுக- தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை



குழந்தைகளின் மனநலம் பாதிக்கும்: தொடக்கக் கல்வித் துறையை நிரந்தரமாக மூடும் அரசாணையை திரும்பப் பெறுக- தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உயர் நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் செயல்படும் தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கப்படும் என்று நேற்று (20.08.2019) தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.



இதன்படி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது. அத்துடன் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் பணிச்சுமை கூடுதலாக்கப் படுகிறது. மேலும் ஈராசிரியர் பள்ளிகளாக செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை அருகிலுள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைப்பதால் கிராமப்புற மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர்.

ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள்

உதாரணத்துக்கு ஒரு கிராமத்தில் நூறு குடும்பங்கள் வசிக்கிறார்கள் என்றால் பள்ளி வயதுக் குழந்தைகள் 15-ல் இருந்து 20 வரைதான் இருப்பர். அதிலும் வசதி படைத்தவர்களின் குழந்தைகள் 3-ல் இருந்து 6 பேர் தனியார் பள்ளிக்குச் சென்றுவிடுவர். மீதமுள்ள குழந்தைகளைப் படிக்க வைக்கத்தான் ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகள் தொடங்கப்பட்டன.


இந்நிலையில் கிராமப்புறங்களில் செயல்படும் ஈராசிரியர் பள்ளிகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுடன் இணைக்கும் போது தொடக்கப்பள்ளி மாணவர்கள் கல்வியைத் தொடர முடியாமல் போகும். கிராமங்களில் குறைந்தபட்சம் 10 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இருக்கின்றன.

ஏற்புடையதல்ல



மேலும் பள்ளிகளை இணைப்பதன் மூலம் தொடக்கப் பள்ளி மாணவர்கள், மேல்நிலைப் பள்ளிகளின் அறிவியல் ஆய்வகம், ஸ்மார்ட் கிளாஸ் நூலகம் ஆகியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறுவதுடன் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பயிற்சிக்கோ, விடுப்பிலோ சென்றால் அந்த வகுப்புகளை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கவனிப்பார்கள் என்று அரசாணையில் குறிப்பிட்டுள்ளது ஏற்புடையதாக இருக்காது.

தொடக்கப் பள்ளிக் குழந்தைகளின் மனநிலை வேறு, உயர்நிலை மேல்நிலைப் பள்ளி மாணவர்களின் மனநிலை வேறு. இவை இரண்டையும் ஒப்பீடு செய்யக் கூடாது. இதனால் குழந்தைகளின் மன நலம் பாதிக்கும்.



ஆட்குறைப்பு நடவடிக்கை காரணமாக பள்ளிகளை ஒருங்கிணைக்கிறோம் என்ற பெயரில் தொடக்கக் கல்வித் துறையை நிரந்தரமாக மூடும் முயற்சியைக் கைவிட்டு தொடக்கக் கல்வியை மேம்படுத்தவும் தொடக்கப் பள்ளிகளுக்கு அடிப்படை வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றும் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம் சார்பில் வேண்டுகின்றேன்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.